பத்து காவான் – சுற்றுச்சூழல் பசுமையைப் பாதுகாப்பது குறிப்பாக மரம் நடுதல் இனி விவசாயிகள், தோட்டக்காரர்கள் அல்லது பசுமை காப்பாளர்களின் பணி மட்டும் அல்ல.
பருவநிலை மாற்றம் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய, அரசாங்க முகவர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் முன்முயற்சி திட்டங்களில் ஒன்றாகும்.
துரித வளர்ச்சிக் கண்டு வரும் பினாங்கு மாநிலத்தில் முதலீட்டாளர்கள் அதிகமான முதலீடு செய்வதோடு தீபகற்பத்தில் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, தொழில்துறையில் முன்னணி வகிக்க சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறிப்பாக மரம் நடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக அவசியமாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பினாங்கு ஆளுநர் தொண்டு அறக்கட்டளை மூலம் ஒரு மில்லியன் மரங்களை நடும் முன்முயற்சி திட்டத்தை வழிநடத்துகிறது. இந்த முன்முயற்சி திட்டம் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும்.
இந்தத் திட்டம் பினாங்கு மாநில ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் அவர்களின் ஆலோசனையில் மலர்ந்தது.
பினாங்கு ஆளுநர் தொண்டு அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ ரோசாலி மாமுட் கூறுகையில், மரம் நடும் திட்டம் உலக புவி தினம் கொண்டாட்டத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
அண்மையில் முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலில், பொது, தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து இந்த முயற்சிக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று ரோசாலி கூறினார்.
அவரது கூற்றுப்படி, ஒரு மில்லியன் மரம் நடும் திட்டத்தில், 45% பொதுத்துறை, 35% தனியார் துறை மற்றும் 20% சமூகம், பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் நடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மலேசியா பசுமைத் தொழில்நுட்பக் கழகத்தின் (MGTC) ஆய்வின்படி இத்திட்டத்தில் நடப்பட்ட ஒரு மில்லியன் மரங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையத் தொடங்கினால், அது வருடத்திற்கு 40,000 டன் கரியமிலவாயுவை உறிஞ்சும் திறன் கொண்டது.
“எனவே, அதிகரித்து வரும் பருவநிலை மாற்ற பிரச்சனையை நிவர்த்தி செய்வதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், நமது கிரகத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் இந்த முன்முயற்சி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்று ரோசாலி கூறினார்.
ஒரு மில்லியன் மரங்களை நடுவதை அதிகாரப்பூர்வமாக மலேசிய சாதனை புத்தகத்தில்(MBOR) பதிவுச்செய்ய இணக்கம் கொண்டுள்ளதாகவும் ரோசாலி கூறினார். இந்த முன்முயற்சி திட்டத்தின் நடப்பு தகவலை அறிய பங்கேற்பாளர்கள் ‘1 Million Tree Penang’ எனும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.
இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன் வந்த பத்து காவானில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ் டெக்னோலோஜி சென் பெர்ஹாட் நிறுவனத்திற்கு டத்தோஶ்ரீ ரோசாலி முன் வந்தார்.
தெற்கு பினாங்கு ஃப்ளெக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகநாயகி சண்முகம் கூறுகையில், மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிப்பது, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பது மற்றும் கார்பன் வெளியேற்றம் மற்றும் பசுமை இல்லா வாயுக்களை குறைப்பது ஆகிய முன்முயற்சிக்கு இந்நிறுவனம் ஆதரவளிக்க இணக்கம் கொண்டுள்ளது, என்றார்.
இந்நிறுவனம் ஆறு பள்ளிகள் மற்றும் ஐந்து கிராமங்களுடன் இணைந்து 2,000 மரங்களை நடவுள்ளது.