ஜார்ச்டவுன் – வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயிலில் நடைபெறவிருக்கும் மாசி மக தெப்பத் திருவிழா (மிதக்கும் தேர் திருவிழா) போது, இயற்கை பொருட்களை மிதவைகளாகப் பயன்படுத்தும் பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
பக்தர்கள் பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தெப்ப மிதவை விளக்குகள் பயன்படுத்த மாற்று வழிகளைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினார். வெற்றிலை இலைகள், நெல் உமிகள் மற்றும் வாழை மரத்தின் தண்டுகளால் செய்யப்பட்ட தட்டுகள் போன்ற விளக்குகளைப் பயன்படுத்துமாறு மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு அறிவுறுத்தினார்.
“ஆரம்ப காலத்தில், தெப்பத் திருவிழாவின் போது மட்டுமல்ல, கடல் வழி நடத்தப்படும் பிற மத விழாக்களிலும், வாழைத் தண்டுகளை இயற்கை எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினோம். வாழைத் தண்டு நன்றாக மிதப்பதோடு மற்றும் கடலில் எளிதில் மக்கும்,” என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
கடல் மாசுபாட்டைத் தடுக்கவும், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், மாநில அரசு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP), மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவை மற்றும் கோயில் நிர்வாகம் ஆகியவை மிதக்கும் விளக்குகளுக்கு மெத்து நுரை அல்லது நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பக்தர்களை வலியுறுத்துகின்றனர்.
“இந்த விழா, இன்னும் அர்த்தமுள்ளதாக உருமாற்றம் காண்பதற்கு அதனை சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகளை கொண்டு பின்பற்றுவது பொருத்தமானதாகும்,” என்று சுந்தராஜூ மேலும் கூறினார்.
கடலில் மாசுபாடு ஏற்படுவதற்கு நுரை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் முக்கிய காரணமாக அமைகிறது. அவை கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்றும் சுந்தராஜூ எடுத்துரைத்தார்.
“இந்தப் பொருட்கள் மீன் மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களால் தவறாக உணவாக உட்கொள்ளப்படுகின்றன. இதனால் அவை தீங்கு விளைவிக்கின்றன அல்லது கொல்லப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
அண்மையில் தொடங்கப்பட்ட ‘பினாங்கு நெகிழிப் பைகள் இல்லாத தினசரி பிரச்சாரம் 2025’, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை ஒழிப்பதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துகிறது.
“திருவிழாவின் போது, பினாங்கு மாநகர் கழகத்தால் (எம்.பி.பி.பி) ஸ்டைரோஃபோம் (Styrofoam) விற்கும் கடைகள் மூடப்படும்,” என்று பிறை சட்டமன்ற உறுப்பினரான சுந்தராஜூ கூறினார்.
பினாங்கு பசுமை கழகத்தின் (PGC) பொது மேலாளர் ஜோசபின் டான், மாநிலத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு ஏற்ப பசுமை முயற்சிகளை அமல்படுத்த ஒப்புதல் வழங்கிய ஆலய நிர்வாகத்தைப் பாராட்டினார்.
தெப்பத் திருவிழாவின் போது செயற்கை நுரை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதற்கான பிரச்சாரம் ஏற்கனவே அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க உதவியுள்ளது என்று பினாங்கு இந்து சங்கத் தலைவர் விவேக ரத்னா தர்மன் குறிப்பிட்டார்
பினாங்கை தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் பங்கு வகிக்க வேண்டும் என்று CAP கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் வலியுறுத்தினார்.
“இந்த முயற்சியில் பினாங்கு இந்து சங்கம் உடனான ஒத்துழைப்பை நான் பாராட்டுகிறேன். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பினாங்கின் பசுமை முயற்சிகளைக் கவனித்து வருகின்றனர், என்று அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயில் தலைவர் ஏ. கணபதியும் கலந்து கொண்டார்.