பினாங்கு தாவரவியல் பூங்கா கண்காணிப்பாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றி அதிகாரப்பூர்வமாக விடைப்பெறும் முன், டத்தோ டாக்டர் சாவ் லெங் குவான் அந்த மலேசியாவின் பழமையான பூங்காவிலுள்ள எழில்மிகு அழகினை எடுத்துரைத்தார். இந்த தாவரவியல் பூங்காவை உலகின் முதன்மை இடமாக உருமாற்றம் காணும் திட்டத்தை அடுத்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிபாடு கொண்டு செயல்பட வேண்டும்.
பினாங்கு நகர்புறம் மற்றும் அழகிய வனப்பகுதியில் இருந்து மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூர இடைவெளியில் அமைந்திருக்கும் இந்த பூங்காவில் இன்னும் பல பசுமைத் திட்டங்கள் மேம்படுத்தலாம்.
“இந்த தாவரவியல் பூங்கா தெலுக் பஹாங் பாதுகாப்பு வனப்பகுதிக்கு அருகாமையில் அமைந்திருப்பது அதன் தனித்துவத்தை சித்தரிக்கிறது. இது இயற்கையின் இயல்பினை நன்கு புலப்படுத்துகிறது.
“30 ஆண்டுகளாக தாவரவியல் துறையில் இருக்கும் தன்னால் இந்த எழில்மிகு தாவரவியல் பூங்காவின் சிறப்பினை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.
“இந்த பினாங்கு தாவரவியல் பூங்கா அமைப்பு மிகவும் நேர்த்தியாகவும் தனித்துவம் கொண்டும் நிற்கிறது,” என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பூங்கா கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகள் ‘சிறப்பு பகுதி திட்டம்'(SAP) மூலம் அருகில் அல்லது தூரத்தில் இருக்கும் பொது மக்கள் இந்த பூங்காவை சிறந்த முறையில் பயன்படுத்த செயல்பட்டதாகக் கூறினார்.
“இத்திட்டத்தில் தாவர கூறுகளுக்கு ஏற்ற பகுதிகளில் நடுவதோடு நன்கு பராமரிக்கப்படும்.
“இதில் மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு முன்னதாக வைக்கப்பட்ட உலோகத் தகடுகளில் உள்ள QR குறியீடுகளை நிறுவுவது போன்ற பிற திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
“இந்த பூங்காவில் 400-க்கும் மேற்பட்ட செடிகள் மற்றும் பெரிய மரங்கள் உள்ளன. எனவே, பார்வையாளர்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து மரங்கள் மற்றும் செடிகள் பற்றி மேல் விபரங்கள் அறிந்து கொள்ள முடியும். இது சிறந்த அணுகுமுறையாக திகழ்கிறது,” என்று சாவ் மேலும் கூறினார்.
இந்த பூங்காவின் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டபோது, 212 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய SPA திட்டத்தில், தோட்ட அமைப்பு; பார்வையாளர் பொது வசதிகள்; தாவர சேகரிப்பு மேலாண்மை; பூங்காவின் உள் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி அருகாமையில் புதிய கோபுர தளம் அமைத்தல்;தற்போதுள்ள நடைபயணம் பாதைகளை மேம்படுத்தல்; மற்றும் பல திட்டங்கள் செயல்படுத்த இலக்கு கொண்டுள்ளதாக கூறினார்.
“ஒரு பூங்கா பார்ப்பதற்கு அழகாக இருப்பதற்கு பொது மக்களின் ஈடு இணையற்ற பங்களிப்பு மிக அவசியமாகும்.
“பூங்கா என்பது தாவரங்களை ஒன்றிணைத்து ஒரு கதைச் சொல்லும் இடமாகும். ஒரு கதையைச் சொல்வதற்கு, நீங்கள் சம்பந்தப்பட்ட கல்வியைத் தெரிந்திருப்பது அவசியமில்லை. ஆனால், அந்த தாவரங்கள் பற்றி அறிய விரும்பும் ஆர்வம் மிக அவசியம்,” என சாவ் கூறினார்.
65 வயது நிரம்பிய சாவ் தனது அடுத்த கட்டம் செம்பனை மரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆவணம் தயார் செய்ய இணக்கம் கொண்டுள்ளதாக கூறினார்.
தைப்பிங்கில் பிறந்தவர் என்றாலும், சாவ் தனது ஆரம்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியை மலாக்கா மற்றும் கிளாங்கில் கற்றார்.
மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் (யு பி.எம்) தாவரவியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர், இயங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை University of Reading, United Kingdom எனும் பல்கலைக்கழகத்தில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.