பத்து காவான் – பண்டார் காசியாவில் உள்ள பூப்பந்து விளையாட்டு மைதானம், அதன் பயனர்களுக்கு மிகவும் உகந்த விளையாடும் சூழலை உருவாக்க புதிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இம்மண்டபம் சரியாக நிர்வகிக்கப்படாத நிலையில், அண்மையில் பூப்பந்து மைதானமாக மாற்றப்பட்டு பண்டார் காசியா கிராம சமூக மேலாண்மை கழகத்தின் (MPKK) உறுப்பினர்களால் இம்மண்டபம் நிர்வகிக்கப்படுகிறது.
பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், கடந்த ஆண்டு எம்.பி.கே.கே இந்த மண்டபத்தை புதுப்பித்து பூப்பந்து மைதானமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கீடு கோரியிருந்தது, என்றார்.
“கோரிக்கையின் அடிப்படையில், நாங்கள் ரிம40,000 நிதியுதவியை அங்கீகரித்தோம். இது இங்குள்ள வசதிகளை மேம்படுத்த, குறிப்பாக பூப்பந்து கோர்ட் மற்றும் பிறவற்றை நிறுவப் பயன்படுத்தப்பட்டது.
“முன்னாள் புக்கிட் தம்பூன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக் அவர்களும் மண்டபத்திற்குள் விளக்குகளை நிறுவுவதற்கு ரிம20,000-ஐ எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்கு நிதியுதவியாக பங்களித்துள்ளார் என்பதையும் நான் அறிகிறேன்.
“பண்டார் காசியாவில் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், மேலும் இங்குள்ள விரைவான குடியிருப்பு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அது தொடர்ந்து அதிகரிக்கப்படும்.
“மாநிலத்தில் உள்ள உள்ளூர் சமூகத்தினரிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் மாநில அரசின் இலக்கின் ஒரு பகுதியாக இது அமைகிறது,” என இன்று பண்டார் காசியாவில் பூப்பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்கு முன் சாவ் தனது உரையில் கூறினார்.
அதுமட்டுமின்றி, மண்டபத்தின் பின்புறம், மாநில வேளாண்மைத் துறையின் முயற்சியில் ‘Farmers to Farmers’ திட்டத்தின் கீழ் நகர்ப்புறத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இது பராமரிப்பு அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர்லேலா அரிஃபின் தலைமையில் மேம்பாடுக் காண்கிறது.
வேளாண்மைத் துறை துணை இயக்குநர் நூர்லியானா சம்சுடின் கருத்துப்படி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நூர்லேலா அலுவலகம் மூலம் மொத்தம் ரிம30,000 ஒதுக்கப்பட்டது, என்றார்.
“இப்போது, இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதற்கு நாங்கள் பண்டார் காசியா எம்.பி.கே.கே குழுவினரை நியமித்துள்ளோம்,” என்று நூர்லியானா முன்னதாக இந்த முன்முயற்சி குறித்து கருத்து கேட்டபோது கூறினார்.
முன்னதாக, செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ அசார் அர்ஷாத் வருகையளித்தார்.
பின்னர், சாவ் புக்கிட் தம்புன் ஜெத்தியை பார்வையிட்ட போது, அங்கு சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகப் பராமரிப்பு மாநில அரசாங்கம் ரிம79,500 மதிப்புள்ள ஒரு படகை வாங்கியுள்ளதாக அவர் அறிவித்தார்.
கம்போங் பாகான் புக்கிட் தம்புன் கிராம சமூக மேலாண்மை குழுவிடம் (MPKK) ஒப்படைக்கப்பட்ட படகில் ஒரு நேரத்தில் 12 பயணிகள் வரை பயணிக்க முடியும், என்றார்.
“இந்தப் படகில் பயணிப்பதன் மூலம் தீவுச் சுற்றுலா மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை இங்குள்ள புகழ்பெற்ற மீன் கூண்டுகளைப் பார்வையிடுவதை ஊக்குவிக்க முடியும்.
“கம்போங் பாகான் புக்கிட் தம்புன் எம்.பி.கே.கே முன்னதாக படகை வாங்குவதற்கு எங்களிடம் ஒதுக்கீடு கோரியிருந்தது.
“எனவே, அவர்களின் கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது,” என பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.