தெலுக் பஹாங் – பத்து ஃபிரிங்கி கடலோர நிலச்சரிவு சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, நீண்டகால நிவாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு மாநில அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநில போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாய்ரில் கீர் ஜோஹாரி, சம்பந்தப்பட்ட அமைச்சுடன் தீவிரமாக ஈடுபடுவது உட்பட, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார்.
இந்த முயற்சியின் விளைவாக, 12வது மலேசிய திட்டத்தின் (RMK-12) கீழ் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், நீண்டகால கடலோர நிலச்சரிவு நிவாரண நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக ரிம61 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் சாய்ரில் முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
“தொடர்ச்சியாக, மலேசியாவின் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (DID) கடந்த பிப்ரவரி,27 அன்று பத்து ஃபிரிங்கியிலிருந்து தஞ்சோங் பூங்கா வரையிலான கடற்கரையை உள்ளடக்கிய ஹைட்ரோகிராஃபிக் கணக்கெடுப்புப் பணிகளுக்கான குத்தகையை விளம்பரப்படுத்தியுள்ளது.
“மேம்பாட்டுப் பணிகள் 2026 அல்லது 2027 ஆம் ஆண்டுகளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நீண்ட கால நிவாரணத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் காத்திருக்கும் வேளையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகளை நிறுவுவதற்காக பினாங்கு மாநில அரசு, வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (DID) மலேசியாவிடம் அவசர நிதிக்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது” என்று சாய்ரில் கூறினார்.
இதற்கிடையில், ஷாங்க்ரி-லாவின் ராசா சயாங் ரிசார்ட் மற்றும் ஸ்பா மற்றும் கோல்டன் சாண்ட்ஸ் ரிசார்ட் தகவல் தொடர்பு இயக்குநர் டத்தோ சுலைமான் துங்கு அப்துல் ரஹ்மான், மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் சேதத்தைத் தடுப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வருகையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்ததாக ஒரு ஆங்கில நாளிதழ் செய்தியில் வெளியிட்டுள்ளது.
“எங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடமிருந்து ஏராளமான கருத்துகளைப் பெற்றோம்.
“இருப்பினும், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதியளிக்கிறது. இந்த முயற்சிகள் மேலும் நிலச்சரிவை தடுப்பது மட்டுமல்லாமல், எங்கள் அனைத்து சுற்றுப்பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
“கடற்கரையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது, மேலும் பத்து ஃபிரிங்கியின் அழகையும் அணுகலையும் பராமரிக்க அவர்கள் தீவிரமாகச் செயல்படுகிறார்கள் என்பதை அறிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அவர் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பினாங்கு போக்குவரத்து வியூகத் திட்டம் (PTMP) கீழ் தொகுப்பு ஒன்று என்றும் அழைக்கப்படும் வடக்கு கடற்கரை இரட்டை சாலை (NCPR) திட்டம், தஞ்சோங் பூங்காவிலிருந்து தெலுக் பஹாங்கிற்கு மாற்றுப் பாதையை வழங்கும் என்று முத்துச் செய்திகள் மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்தார்.
பினாங்கின் வடக்கு கடற்கரையோரத்தில் இணைப்பை மேம்படுத்துவதையும் நெரிசலைக் குறைப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பத்து ஃபிரிங்கி மற்றும் தெலுக் பஹாங்கில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஊந்துகோளாகச் செயல்படுகிறது.