பத்து உபான் – அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரண்டாம் தவணையாக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் வெற்றிப் பெற்றார். இவர் 16,000-கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் ஒருமுறை மக்களின் பேராதரவை பெற்று மகத்தான வெற்றி மகுடத்தைச் சூடினார்.
சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் பத்து உபான் தொகுதியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து சேவையாற்ற இருப்பதாக அண்மையில் முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்கள் உடனான
நேர்க்காணலின் போது இவ்வாறு கூறினார்.
அவ்வாட்டாரத்தின் அடுத்தக்கட்ட மேம்பாட்டுத் திட்டங்களைப் பற்றிய வேள்விக்கு, அவர் சுங்கை டுவாவில் 445 யூனிட் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை அமைக்க இணக்கம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனிடையே, சுங்கை டுவா, தாமான் பெக்காக்கா மற்றும் பத்து உபானில் பொதுச் சந்தை அமைக்க மாநில அரசிடம் கோரிக்கையை முன் வைக்கவுள்ளார்.
“மேலும், பத்து உபான் அல்லது பாயான் பாரு பகுதியில் ஈமச்சடங்கை மேற்கொள்ள இஸ்லாம் அல்லாதோர் பயன்படுத்தும் வகையில் ஈமச் சடங்கு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன். இவ்வட்டார மக்கள் இறுதிச் சடங்குக்காக பத்து லஞ்சாங்கிற்குச் செல்ல நேரிடுகிறது. இப்பகுதியில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் சரியான இடத்தை அடையாளங்கண்டு விரைவில் இத்திட்டத்தை மேற்கொள்வேன்,” என குமரேசன் தெரிவித்தார்.
தொடர்ந்து, இளைஞர்கள் தொழிற்கல்வியில் முன்னணி வகிக்க பினாங்கு திறன் மேம்பாட்டுக் கழகம், தனியார் நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்கள், அரசு துறை மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளுடன் இணைந்து சேவையாற்ற உறுதிபாடு தெரிவித்தார். இதன் மூலம், இளைஞர்களிடையே வேலை இல்லா திண்டாட்டம் குறைவதோடு திறன்மிக்க தொழிலாளர்களை நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உருவாக்க வழி வகுக்கும் என குமரேசன் தெரிவித்தார்.
“பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் நிறைய மாற்றங்களையும் புதிய திட்டங்களையும் வகுத்துள்ளோம். இதன் வழி, பினாங்கு வாழ் இந்தியர்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படும்,” என அதன் வாரியத்தின் ஆணையருமான அவர் குறிப்பிட்டார்.
பதிவாக, கடந்த 2018 முதல் ஜுன் 2023 வரை முதல் தவணை சட்டமன்ற உறுப்பினராக சேவையாற்றிய குமரேசன் ஐந்தாண்டுகளில் 112 மக்கள் திட்டங்கள் (projek rakyat); 233 நபர்களுக்கு சமூகநலத் திட்ட உதவிகள் வழங்குதல்; பினாங்கு வீடமைப்புப் பராமரிப்பு நிதியத்தின் கீழ் 45 பராமரிப்பு திட்டங்கள் வாயிலாக மின் தூக்கி பழுதுப்பார்த்தல், தண்ணீர் தொட்டி மேம்பாடு, கூரை மாற்றுதல், அடுக்குமாடி குடியுருப்புகளுக்கு சாயம் பூசுதல் மற்றும் நீர்ப்புகாப்பு (waterproofing) மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, இந்த ஐந்தாண்டுகளில் 67 மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாக சாலை விரிவாக்கம், பாதசாரி நடைப்பாதை அமைத்தல், சாலைகள், வடிகால்களை சரி செய்தல், PBA குழாய்களை மாற்றுதல், பாதுகாப்பு தண்டவாளங்களை நிறுவுதல் போன்ற திட்டங்களும் இடம் பெற்றன.
மேலும், STEM கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஐந்து பள்ளிகளுக்கு (சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி உட்பட) மேகர் லெப் வகுப்பறையும் நிறுவ குமரேசன் உதவிகள் நல்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 30 ஆண்டுகாலமாக வெள்ளப் பிரச்சனையை எதிர் நோக்கியிருந்த மிட்டன் ஹைட்ஸ் பகுதியில் வெள்ள நிவாரண திட்டம் மேற்கொள்ளப்பட்டு அப்பிரச்சனைக்குத் தீர்வுக் காணப்பட்டது.