பாயான் லெப்பாஸ் – பத்து காவான் தொழிலியல் பூங்கா 3 (BKIP 3) இன் வளர்ச்சியானது, இந்த மாநிலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு அவர்களுக்குக் கூடுதல் வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் உறுதிசெய்கிறது.
பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) உருவாக்கும் இத்திட்டமானது, பினாங்கு மாநிலத்தை உள்நாட்டு மற்றும் அனைத்துலக நிறுவனங்களுக்கு விருப்பமான முதலீட்டு இடமாக இடம்பெற செய்கிறது என முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
“எனவே, செயல்பாடுக் காணும் இந்த வளர்ச்சித் திட்டத்திற்கு இணங்க, உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் பி.டி.சி முக்கியப் பங்கு வகிக்கிறது.
அவற்றில், உலகளாவிய வணிக சேவை மையம் அல்லது உலகளாவிய வணிக சேவைகள் (GBS) மற்றும் தொழிலாளர்கள் மையம் இடம்பெறுகிறது.
“இந்த வசதிகள் அனைத்தும் நீண்டக் கால பொருளாதார வளர்ச்சிக்கானது. இதன் மூலம், மூன்றாவது புதிய நகரமான பண்டார் காசியாவின் வளர்ச்சி போன்ற பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த உதவுகிறது. இதில் வீடமைப்பு, வணிகம், பொழுதுபோக்கு மற்றும் தொழில்துறையும் உள்ளடங்கும்,” என்று முதலமைச்சர் பி.டி.சி இன் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.
மேலும், புக்கிட் தம்புன் மாநில சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக்; பி.டி.சி தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ அஜீஸ் பாக்கர் மற்றும் பி.டி.சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பி.டி.சி ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், பினாங்கை மிகவும் பெருமையான நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
“தற்போதைய உலகப் பொருளாதாரத்தின் சூழலில், பி.டி.சி தொடர்ந்து வெற்றி அடையும் என்றும், நிலையான சமூக-பொருளாதார வளர்ச்சியின் மூலம் நிலையான மற்றும் மிகவும் சாதகமான மாநில வளர்ச்சிக்கு முன்னோடியாக இருக்கும் என்றும் மாநில அரசு நம்புகிறது.
“தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு பி.டி.சி தொடர்ந்து ஒரு உந்துசக்தியாகத் திகழும்,” என்று பி.டி.சி 10வது தொழில்துறை பூங்காவை உருவாக்கி வெற்றிக் கண்டதைப் பாராட்டி முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
அதே நேரத்தில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை முதலமைச்சர் வெளிப்படுத்தினார். மேலும், இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்கட்டமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
“கடந்த வாரம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் (PIA) விரிவாக்கம் மற்றும் பினாங்கு இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டமும் இதில் அடங்கும்.
“இந்த பி.டி.சி இன் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடரும் மற்றும் எதிர்காலத்தில் இன்னும் சிறந்த சாதனைகளைப் படைக்க வலுப்படுத்தப்படும்,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கொன் இயோவ் கூறினார்.