பெர்தாம் – பினாங்கு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில்
சுமார் 10,000 பொது மக்கள் கெபாலா பத்தாஸ், மில்லினியம் அரங்கத்தில் ஒன்றுக் கூடினர்.
மாநில ஆளுநர் (TYT), துன் அஹ்மத் புஃஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோஹ் புவான் கத்தீஜா முகமது நோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் அவரது துணைவியார் டான் லீன் கீ; முன்னாள் முதலமைச்சர், லிம் குவான் எங்; மாநில சட்டப் பேரவையின் சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்; முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முகமது அப்துல் ஹமீத்; இரண்டாம் துணை முதலமைச்சர், ஜக்தீப் சிங் டியோ; மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புக் கொண்டாட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூகத்திற்கும் நல்லிணக்கத்தின் மேன்மையைப் பறைச்சாற்றுகிறது,” என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
“பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதும் வேறுபாடுகளை மதிப்பதும் நமது சமூகத்தின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்படுகிறது.
“எனவே, இந்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் உறவுகளை வலுப்படுத்துமாறு பினாங்கு வாழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
“இந்தத் திறந்த இல்ல உபசரிப்பில், நட்பின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான நமது உறுதிப்பாட்டை மேம்படுத்தவும் வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பினாங்கில் இஸ்லாமிய போதனைகளை வலுப்படுத்துவதற்கும் இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும் உறுதி கொள்கிறது. மாநில அரசாங்கம் இஸ்லாமிய மத மையங்களின் கௌரவத்தையும் எப்போதும் பாதுகாக்கிறது, என்றார்.
“கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களில் முஸ்லிம்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் சேவைகளை வழங்குவதும் இதில் அடங்கும்.
“நாட்டின் மொத்த வர்த்தக ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்களிப்பாளராக பினாங்கு மாநிலம் திகழ்கிறது. மேலும் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய உள்கட்டமைப்பு மேம்பாடு மிகவும் அவசியமாகும்.
“அவற்றில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டமும் (LTAPP) ரிம1 பில்லியன் ஒதுக்கீட்டில் மேம்பாடுக் காணும்.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 2024 மே 3 முதல் 5 வரை மூன்று நாட்களுக்கு சுங்கை நிபோங் கண்காட்சி மைதானத்தில் நடைபெறும் வட மண்டல மக்கள் மடானி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக முதலமைச்சர் கூறினார்.