பருவநிலை மாற்றத்தின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு பசுமைப் பட்டறை வழிகாட்டி

Admin
img 20240516 wa0015

பாயான் லெப்பாஸ் – சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) பினாங்கு பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது,குறிப்பாக பினாங்கில் நமது பொருளாதாரம் பெரும்பாலும் உற்பத்தித் துறை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் (MNCs) வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பருவநிலை மாற்றம் என்பது சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு பொருளாதாரச் சவாலாகவும் மாறியுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

UN குளோபல் கொம்பாக்ட் நெட்வொர்க் மலேசியா மற்றும் புரூணையின் நிர்வாக இயக்குனர் பரோஸ் நாடார் கூறுகையில், பருவநிலை தொடர்பான அபாயங்களை நிர்வகிக்கத் தவறினால் அவை விரும்பத் தகாத சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும்.

 

“இதனைக் கவனிக்கத் தவறினால், அது சமூகம் மற்றும் வணிகங்கள் ஆகிய இரண்டிற்கும் கணிசமான நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

“மலேசியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் SME-களுக்கு இது மிகவும் முக்கியமானது.

“உலகளாவிய விநியோகச் சங்கிலி உரிமையாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் விநியோகஸ்தர் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து பருவநிலை தரவுகளை அதிகளவில் கோரும் ஒரு சகாப்தத்தில், SME கள் ஒரு தனித்துவமான சவாலையும் வாய்ப்புகளையும் எதிர்கொள்கின்றன.

“அனைத்துலக அளவில் ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் செய்ய விரும்புவோர் இப்போது தங்களின் பருவநிலை செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

“குறைந்த கார்பன் நடைமுறைகளை நோக்கிய இந்த மாற்றம் ஒரு ஒழுங்குமுறை தேவை மட்டுமல்ல, ஒரு வணிகக் கட்டாயமாகும்.

“நிலையான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது பருவநிலை அபாயங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல் பசுமைச் சந்தை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும். குறைந்த கார்பன் பொருளாதாரத்தில் SME-கள் போட்டித்தன்மையுடனும், நெகிழ்ச்சியுடனும் இருப்பதை உறுதி செய்யும்,” என்று பரோஸ் இன்று பாயான் லெபாஸில் உள்ள அமாரி ஸ்பைசில் நடைபெற்ற பினாங்கில் பருவநிலை நடவடிக்கை பட்டறையின் போது கூறினார்.

இப்பட்டறையில் பல மாநில பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

பினாங்கு பசுமைக் கழகம் (PGC), இண்வெஸ்ட் பினாங்கு மற்றும் அலையன்ஸ் வங்கியுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் குளோபல் கொம்பாக்ட் மலேசியா மற்றும் புரூணை(UNGCMYB) நடத்திய இந்த பட்டறையின் சிறப்பம்சமாக UNGCMYB இன் முன்னேற்ற பருவநிலை முதிர்வு மதிப்பீட்டுக் கருவியை அறிமுகப்படுத்தியது.

டிஜிட்டல் வாயிலாக முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டிற்கான முக்கிய பகுதிகளை அடையாளம் காணவும், SMEகளை நிதி மற்றும் பசுமையான நிதி முயற்சிகளுடன் இணைக்கவும் உதவும் என்று பாரோஸ் குறிப்பிட்டார்.

இந்தப் பட்டறையின் தொடக்க விழாவின் போது மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, இன்வெஸ்ட்பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ லூ லீ லியான் மற்றும் PGC பொது மேலாளர் ஜோசப்பின் டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இப்பட்டறையில் சிறப்புரை ஆற்றிய டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, பினாங்கு மாநில அரசாங்கம் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள தொடர்ந்து பசுமை முயற்சிகளை கையாளும் என நம்பிக்கை தெரிவித்தார்.

img 20240516 wa0016