பினாங்கு – பள்ளிகளில் சீருடை முகாமை நடத்துவது தேசிய அளவில் மாணவர்களிடையே கட்டொழுங்கு,தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பு ஆர்வத்தை மேலோங்க வழிவகுக்கும். மேலும், சீருடை அணிவதன் மூலம் மாணவர்களின் திறனையும் வெளிப்படுத்த உதவுமென தமிழ் சமூக நீதி இயக்கத்தின் தலைவர் தியாகராஜ் சங்கரநாராயணன் கூறினார்.
பினாங்கு மாநில தேசிய அளவிலான சீருடை முகாமை 2024 அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து அவர் இவ்வாறு உரையாற்றினார்.முதன் முறையாக, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் வினோத் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த இந்த முகாம் மாணவர்களின் எதிர்பார்ப்பையும், இலக்கையும் அடைந்திருப்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
தலைமையாசிரியரின் வெற்றிகரமான இந்த ஏற்பாடு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பண்பு வளர்ச்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் என தியாகராஜன் சங்கரநாராயணன் புகழாரம் சூட்டினார்.

பினாங்கு மாநில கல்வி இலாகா இணைப்பாட திட்ட மையத்தில் நடைபெற்ற இந்த சீருடை முகாமில்,சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியிலிருந்து 31 மாணவர்களும், பழனியாண்டி தமிழ்ப்பள்ளியிலிருந்து 22 மாணவர்களும், ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்து 20 மாணவர்களும், இராமதாசர் தமிழ்ப்பள்ளியிலிருந்து 20 மாணவர்களும், திரான்ஸ் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்து 12 மாணவர்களும் மற்றும் இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளியிலிருந்து 7 மாணவர்களும் கலந்துப் பயன் பெற்றனர்.
மேலும் பேரா அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்து 6 மாணவர்களும் சின் வா தமிழ்ப்பள்ளியிலிருந்து 8 மாணவர்களும், பொண்டோக் தஞ்சோங் தமிழ்ப்பள்ளியிலிருந்து 6 மாணவர்களும் மற்றும் டாருள் அமான் தமிழ்ப்பள்ளியிலிருந்து 18 மாணவர்கள் என மொத்தம் 150 மாணவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர்.

“சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல், ஒற்றுமை, கட்டொழுங்கு, தன்னம்பிக்கை, நாட்டின் மீது விசுவாசம், பிறர்பால் அன்பு செலுத்துதல் போன்ற நற்பண்புகள் மேலோங்கச் செய்கின்றது.மாணவர்கள் இவ்வாரான பண்புகளை கற்று, பின்பற்றும் பொழுது அவன் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழச் செய்ய புறப்பாட நடவடிக்கை முக்கிய பங்காற்றுகின்றது.
“புறப்பாட நடவடிக்கையில் விளையாட்டில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் உடலை உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி முக்கியம் என சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் நேரத்தை நல்வழியில் செலவிடவும், அவர்கள் விளையாட்டில் தங்களின் திறனை வெளிப்படுத்தவும் முடிகிறது.
“ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதில் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. நற்பண்புள்ளவனாகவும் , தன்னலம் கருதா மாந்தனாகவும் உருவாக பள்ளி புறபாட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது.ஆகையால், ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டு மேன்மை பெற வேண்டும்”, என சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் வினோத் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிறை சட்டமன்ற உறுப்பினரும்,பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூவின் சிறப்பு அதிகாரி ஜோதி இளம்பேரு மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.