பாகான் – பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் வசதி குறைந்த பி40 குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளை வழங்கும் சமூகநலத் திட்டம் நடைபெற்றது. இத்திட்டம் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மையத்தில் இடம்பெற்றது.
“இந்த சமூகநலத் திட்டம், பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கண் பார்வையை மேம்படுத்துவதோடு, சமூகத்தின் தேவையுள்ள பிரிவுகளுக்குச் சரியான நேரத்தில் உதவியாக அமைகிறது.
“இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 45 பள்ளி மாணவர்களும், பி40 பிரிவைச் சேர்ந்த பெரியவர்களும் முன்னதாக பதிவு செய்து, கண் பரிசோதனையில் பங்கேற்றதற்குப் பிறகு, இலவசமாக இந்த மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்த மூக்கு கண்ணாடிகள், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதிலும், பெறுநர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதிலும் முக்கிய பங்காற்றும்,” என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் மூக்கு கண்ணாடிகளை நேரடியாக வழங்கும் வாய்ப்பு கிடைத்தது எனத் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பெறுநர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காணும் தருணம் மிகவும் மனமகிழ்வாக இருந்தது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி, தேவையுள்ளவர்கள் யாரும் புறக்கணிக்கப்படாமல், தக்க நேரத்தில் உதவிகளைப் பெறுவதற்கு உறுதி அளிக்கும் தொடர்ச்சியான சமூகநலத்திட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும். சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மேலும் பல திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்தும் திட்டமாக உள்ளதாகவும், இது ஒரு முக்கிய முன்னேற்றம் எனவும் குமரன் கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
“மக்களின் நலனும், அவர்களின் வாழ்வாதார மேம்பாடும் எங்களின் பொறுப்பாகும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். பாகான் டாலாம் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் எப்போதும் எங்கள் முன்னுரிமையாக திகழ்கிறது,” எனவும் குமரன் கிருஷ்ணன் உறுதியாகத் தெரிவித்தார்.