24 சதவீதம் இந்தியர்கள் பதிவு பெற்ற வாக்காளர்கள் இருக்கும் பாகான் டாலாம் தொகுதியில் புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்ற அவ்வட்டார மக்களின் கோரிக்கைக்கு இணங்க அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற அனுமதி கேட்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு டான் ஸ்ரீ முகைதின் முஹமாட் யாசினுக்குப் பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கடிதம் எழுதியுள்ளார்.
பட்டர்வொர்த் பாகான் டாலாம் தொகுதியில் புதிதாகத் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்குப் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு நிலம் வழங்கத் தயாராக இருக்கிறது. பள்ளிக்கூடம் கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் லிம் கேட்டுக்கொண்டார். பட்டர்வொர்த் வட்டாரத்தில் குறிப்பாகப் பாகான் தொகுதியில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளியான மாக்மண்டின் தமிழ்ப்பள்ளி மட்டுமே இருப்பதாலும் அப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்வதாலும் இத்தொகுதியில் இன்னொரு தமிழ்ப்பள்ளி அமைப்பதின் வழி பாகான் டாலாம் சுற்று வட்டார இந்தியர்கள் தங்களின் தாய் மொழி தமிழ் மொழியைப் கற்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் பினாங்கு மாநில முதலமைச்சர் என்ற முறையில், கல்வி அமைச்சருக்கு இக்கடிதம் எழுதப்பட்டிருப்பதாக முதலமைச்சர் லிம் பகான் டாலாம் நாக கன்னியம்மன் ஆலய வலாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார். மேலும், மாற்றம் என்பது வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் மக்களின் நலன் கருதி மாற்றத்தைக் கொண்டு வந்து அமல் படுத்துகிறோம் என்று முதல்வர் தொடர்ந்து கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி, பாகான் டாலாம் தொகுதியில் தமிழ்ப்பள்ளி என்பது இவ்வட்டார மக்களின் நீண்ட நாள் போராட்டம். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதம் செய்திருக்கிறேன். கடந்த பொது தேர்தலுக்கு முன்பு இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தனசேகரன் விடுத்த கோரிக்கைக்கு இன்று மாநில முதலமைச்சரின் மூலம் ஒரு விடிவெள்ளி பிறந்துள்ளதாகப் பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.
பட்டர்வொர்த் பாகான் டாலாம் தொகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி எழுப்புவதற்கு மாநில அரசாங்கம் அனுமதி வழங்கி விட்டது இனி மத்திய அரசாங்கத்தின் குறிப்பாக கல்வி அமைச்சின் பதிலுக்காக காத்திருக்கின்றோம் என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு ஏ,தனசேகரன் தம்முரையில் கூறினார், பாகான் டாலாம் பொது மக்கள் உட்பட பட்டர்வொர்த் தொழிலதிபர் டத்தோ ஆர்.அருணாசலம், செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்கள் திரு சி.சந்திரசேகரன், அப்துல் லத்திப், முகமாட் ஃபாரிட், ஜசெக கிளை தலைவர்கள் திரு ஜி.அசோகன், ஜசெக இளைஞர் பகுதி உறுப்பினர்கள் திரு கிருஷ்ணமூர்த்தி நாயுடு, திரு சத்தீஸ் முனியாண்டி, பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதி சுற்று வட்டார மாநில அதிகாரிகள் திரு கேசன், புஸ்பா, கிராம மேம்பாட்டுப் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் புதிய தமிழ்ப்பள்ளிக்கான மாநில அரசங்கத்தின முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு நன்றி கூறினர்.