பாகான் டாலாம் தொகுதியில் பினாங்கு2030 மையம் அதிகாரப்பூர்வத் திறப்பு விழா

Admin

பட்டர்வொர்த் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் பாகான் டாலாம் தொகுதியின் தாமான் ஜாவாவில் பினாங்கு2030 மையத்தை
அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த மையம் பொது மக்கள் மாநில அரசாங்கத்தின் இலக்கை அறிந்து கொள்வதோடு ஒன்றிணைந்து செயல்படவும் துணைபுரியும் என தெரிவித்தார்.

‘பினாங்கு2030 இலக்கு’ குறித்து பொது மக்கள் அதன் அடிப்படை முதல் அறிந்து கொள்ள இந்த மையம் கருவியாகத் திகழும், சாவ் கூறினார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “பினாங்கு2030′ இலக்கு குறித்த அதன்
தொலைநோக்குத் திட்டங்களை அனைவருக்கும் அறிய வைப்பதற்காக மாநில அரசாங்கம் மேற்கொண்ட முன்முயற்சியாக இம்மையம் விளங்குகிறது.

“ஒரு கொள்கையை உருவாக்குவது அல்லது ஒரு குறிக்கோளை உருவாக்குவது பலரால் செய்ய முடியும். ஆயினும், இக்கொள்கையை மாநிலத்தின் மேம்பாட்டுக்கு ஏற்ப அடிமட்டத்தில் இருந்து செயல்படுத்த இணக்கம் கொள்வது சவாலானப் பணியாகும்.

மேலும் கருத்து தெரிவித்த முதல்வர்,
பாகான் டாலாம் பினாங்கு2030 மையத்தில் குறியீட்டு வகுப்பு மற்றும் ரோபோடிக் வகுப்புகள் போன்ற திட்டங்கள் நடத்தப்படும், என்றார்.

“இன்று டெக் டோம் பினாங்கு ஒருங்கிணைப்பில் இத்தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு பட்டறை நடத்தப்படுவதாக அறியப்பட்டேன்.

“இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் அல்லது திட்டங்கள் வழிநடத்துவதற்கு அருகில் உள்ள அமைப்புகளுடன் இந்த மையம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கலந்து கொண்டார்.

ஒவ்வொரு பினாங்கு2030 மையத்தை இயக்குவதற்கும் மாநில அரசாங்கம் மாதந்தோறும் ரிம2,000-ஐ நிதியுதவியாகச் செலுத்தும் என்றும் சாவ் கூறினார்.

“பாகன் டாலாம் தொகுதியில் பினாங்கு2030 மையத்தைத் தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இது பினாங்கில் தொடங்கப்பட்ட 22வது பினாங்கு2030 மையமாகும்.

“சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் தனது கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) தலைமையின் கீழ் இந்த மையத்தில் நிகழ்ச்சிகளை நடத்த உத்வேகம் கொள்வார் என்று நம்புகிறேன்.

பினாங்கு2030 மையத்தை அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும் என்று சாவ் தனது எண்ணத்தை முன் வைத்தார்.