பாகான் தொகுதியில் முதல் இந்திய பூப்பந்து விளையாட்டு அரங்கம் நிர்மாணிக்கப்படும்

Admin

பாகான் – பினாங்கு மாநில இந்தியச் சமூகத்தினர் விளையாட்டுத் துறையில் இலை மறை காயாக மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தவும் மாநில மற்றும் தேசிய ரீதியிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் இன்று பாகான் பகுதியில் பினாங்கு இந்தியர் பூப்பந்து விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கால் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

‘இத்திட்டத்தைச் செயல்படுத்த செபராங் பிறை மாநகர் கழகம்(எம்.பி.எஸ்.பி) 2300 சதுர அடி நிலப்பரப்பை 15 ஆண்டுகளுக்கு ஒத்தகை முறையில் வாடகைக்கு வழங்கியுள்ளது. இந்த வாடகைக்கான கால வரையறை இன்னும் 15 ஆண்டுகளுக்கு அதிகரிக்க இச்சங்கம் எம்.பி.எஸ்.பி-யிடம் விண்ணப்பிக்க உத்தேசிப்பதாக,” பினாங்கு இந்தியர் பூப்பந்து சங்கத்(PIBA) தலைவர் துரைராஜு முனியாண்டி தெரிவித்தார்.

 

பினாங்கு இந்தியர் பூப்பந்து விளையாட்டு அரங்க மாதிரி வரைப்படத்தை சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மற்றும் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் டேவிட் மார்ஷல் பார்வையிட்டனர்.

முன்னதாக, இச்சங்கம் ஜாலான் பாக் அபு-வில் உள்ள விளையாட்டு அரங்கை வாடகைக்கு எடுத்து விளையாட்டாளர்களுக்கு பூப்பந்து பயிற்சிகளை வழங்கி வந்தனர். கூடுதலான வாடகையை மாதந்தோறும் செலுத்த வேண்டிய காரணத்தாலும் சொந்த விளையாட்டு அரங்கம் நிர்மாணிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் இன்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என துரைராஜு விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ இராமச்சந்திரன்; PIBA சங்க ஆலோசகரும் தொழிலதிபருமான ஹரிகிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பினாங்கு இந்தியர் பூப்பந்து விளையாட்டு அரங்கம் சுமார் ரிம2.1 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, இங்கு நிர்மாணிக்கப்படும் பூப்பந்து அரங்கம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி பல்லின மக்களும் பயன்படுத்த முடியும். மேலும், இந்த விளையாட்டு அரங்கத்தை ஓர் இனத்தின் அரங்கமாகப் பார்க்காமல் மூவின மக்களும் பயன்படுத்திப் பயன்பெறலாம் என பேராசிரியர் சூளுரைத்தார்.

இது இந்திய இளைஞர்களுக்கும் சிறந்த விளையாட்டு அரங்கமாகத் திகழும், என்றார்.

“பூப்பந்து துறையில் அண்மையில் இந்தியர்கள் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றனர். எனவே, இத்திட்டம் இந்தியர்களின் அடையாளமாகத் திகழும்,” என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் அடிக்கால் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

பினாங்கு இந்தியர் பூப்பந்து சங்க அரங்கம் ஐந்து ‘பூப்பந்து கோர்ட்’, ‘ஜிம்’ உடற்பயிற்சி மையம், வாகன நிறுத்துமிடம், PIBA அலுவலகம் மற்றும் முக்கிய பொது வசதிகளுடன் நிர்மாணிக்கப்படும். பாகானில் இதுவே முதல் இந்திய விளையாட்டு அரங்கமாகத் திகழும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தெரிவித்தார்.

இந்த காலி மேம்பாட்டுத் தலத்தை தூய்மைப்படுத்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தனது சேவை மைய நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரிம10,000 வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்திட்டத்திற்காக விரைவில் நிதியுதவி வழங்கவிருப்பதாக சத்தீஸ் குறிப்பிட்டார்.

இத்திட்டம் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் நிதி வழங்கல் மூலம் நிர்மாணிக்கத் திட்டமிடப்படுகிறது. இத்திட்டம் இன்னும் ஓராண்டு காலத்தில் நிறைவுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.