பாகான் நாடாளுமன்றத் தொகுதியில் கூடுதலாக பல மேம்பாட்டுத் திட்டங்கள் – லிம் குவான் எங்

Admin
img 20240619 wa0026

பாகான் – பாகான் நாடாளுமன்றத் தொகுதி குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த ஆண்டு, இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரிம1.1 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அறிவித்தார்.

“ஜாலான் நியூ ஃபெரி, ஜாலான் தெலகா ஆயிர் மற்றும் கம்போங் காஜாவில் கான்கிரீட் வடிக்கால் மேம்படுத்தும் பணிகள் ஆகியவை இந்த செயல்பாட்டுத் திட்டங்களில் அடங்கும்.

“இது தவிர, பாகான் லுவாரில் நடைபாதையை மேம்படுத்துதல், மத்திய சாலைகளில் உள்ள சாலை கோடுகளுக்கு மீண்டும் வர்ணம் பூசுதல் மற்றும் பாகான் லுவார் மற்றும் ஜாலான் தெலாகா ஆயிர் சாலை சந்திப்பில் கான்கிரீட் வடிக்கால் மேம்படுத்தும் பணிகள் ஆகியவை அடங்கும்.

“இந்த மேம்பாட்டுத் திட்டங்களில் பாகான் சேவை மையம் முதல் லோட்டஸ் பாகான் அஜாம் வரை உள்ள ‘ஸ்கப்பர்’ வடிக்கால் மேம்படுத்தப்படுவதும் உள்ளடக்கும்,” என்று பாகான் சேவை மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது லிம் கூறினார்.

இந்த மாதிரியான மேம்பாட்டுத் திட்டங்களில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படும்போது பொது மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் லிம் கூறினார்.

“கடந்த ஆண்டு, பாகான் நாடாளுமன்றத் தொகுதிக்குக் கூடுதலாக ரிம1.35 மில்லியன் ஒதுக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், செனட்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், ஜாலான் தம்பி கெச்சிலில் ஒரு புதிய மாக் மண்டின் சுகாதார கிளினிக் கட்டுவது பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். இத்திட்டத்தின் வாயிலாக ஒரு நாளைக்கு 300-500 நோயாளிகள் பயன்பெறுவர்.

“இத்திட்டம் ரிம42 மில்லியன் மதிப்பீட்டில் நான்கு ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2025, ஏப்ரல் மாதம் தொடங்கும்.

“மாக் மண்டின் சுகாதார கிளினிக் 2027 இன் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தற்போதுள்ள மாக் மண்டின் சுகாதார கிளினிக் பல் மருத்துவ மனையாக மேம்படுத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இது தவிர, பட்டர்வொர்த் சுகாதார கிளினிக் ரிம80 மில்லியன் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும் என்று லிங்கேஸ்வரன் கூறினார்.

“ஜூன்,7 அன்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அமாட் பட்டர்வொர்த் கிளினிக்கிற்குச் சென்றபோது, தற்போதுள்ள பட்டர்வொர்த் சுகாதார கிளினிக்கை மறுசீரமைப்பு செய்வதற்கான எங்கள் முன்மொழிவுக்கு அவர் ஒப்புதல் அளித்தார்.

“இந்த சுகாதார கிளினிக் 500 முதல் 800 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க உதவும்.

“சுகாதார அமைச்சு பட்டர்வொர்த் சுகாதார கிளினிக்கு ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றையும் வழங்கியுள்ளது. இது அந்த கிளினிக்கில் செயல்படும் முதல் ஆம்புலன்ஸ் ஆகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

மாக் மண்டின் சுகாதார கிளினிக்கின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு ஆம்புலன்ஸ் வண்டி வசதியும் வழங்கப்படும் என அறியப்படுகிறது.