பாடாங் தெம்பாக் அடுக்குமாடி வீடுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு

பினாங்கில் உள்ள மிகப் பழமையான அரசாங்க அடுக்குமாடி வீடுகளில் ஒன்றான பாடாங் தெம்பாக்கில் அமைந்துள்ள ரைஃபில் ரேஞ் அடுக்குமாடி வீடுகளின் பாதுகாப்பை மேம்படுத்த சூழ்ந்துருக் காட்டிகள் ‘CCTV’ பொருத்தப்பட்டுள்ளன. இந்த குறைந்த விலை குடியிருப்புப் பகுதியில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்தப் பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதனைப் பார்வையிட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், ஆட்சிக் குழு உறுப்பினர் திரு வொங் ஹொன் வாய், சட்டமன்ற உறுப்பினர்களான திரு ஜேசன் ஒங், திரு லியு சின் தொங், வீடமைப்புத் துறையைச் சார்ந்த அரசு ஊழியர்கள் ஆகியோர் அண்மையில் F அடுக்குமாடிக் கட்டடத்திற்கு வருகை மேற்கொண்டனர். ரிம 89,970 செலவில் A முதல் F வரையிலான அடுக்குமாடி வீடுகளின் 24 மின் தூக்கிகளின் உட்புறத்திலும் வெளி புறத்திலும் இக்கட்டடங்களில் சுற்றுப்புறத்திலும் இக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதி அதிக தூய்மை அடைந்திருப்பதுடன் நிறைய வசதிகளையும் பெற்றுள்ளதென்பதை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர் எனலாம். முதல்வர் லிம்மின் வருகையை அங்கிருந்த பல மூத்த குடிகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்து அவருக்கு நன்றி தெரிவித்துச் சென்றதைக் காண முடிந்தது.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பை மேம்படுத்தவும் சீரமைக்கவும் இதுவரை ரிம 4,463,390.36 தொகை செலவிடப்பட்டுள்ளது. மறுச்சாயம் பூசல், மின் தூக்கி பழுதுபார்ப்பு, கழிவு நீர்க் குழாய் மாற்றல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்ந்துருக் காட்டிக் கருவிகளின் பொருத்தலுக்குப் பிறகு இப்பகுதி பாதுகாப்பாகவும் குற்றச் செயலகளின் எண்ணிக்கை குறையும் எனவும் எதிர்பார்ப்பதாக முதல்வர் லிம் தெரிவித்தார்.

1595_537536939609745_385682826_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

சட்டமன்ற உறுப்பினர்களான மதிப்பிற்குரிய திரு வொங் ஹொன் வாய், திரு ஜேசன் ஒங் சூழ்ந்துருக் காட்டியைப் பார்வையிடுகின்றனர்.