ஆயிர் ஈத்தாம் – பினாங்கு வீட்டுவசதி வாரியம்,
ஜார்ச்டவுனில் உள்ள பாடாங் தேம்பாக் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கியது. இதனைப் பெற்றுக் கொண்ட அவ்வட்டார குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, முதலில் தகுதிபெற்ற 10 பெறுநர்களுக்கு உணவுக் கூடைகளை எடுத்து வழங்கினார்.
மொத்தமாக, ஈ மற்றும் ஜே ‘பிளாக்’,களில் இருந்து 140 பெறுநர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
“பொது மக்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகிப்பதில் சிறப்பாக பணியாற்றிய பினாங்கு வீட்டுவசதி வாரிய ஊழியர்களுக்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன்.
“முன்னர் குறிப்பிட்டது போல், வீட்டுவசதி வாரியம் இந்த திட்டத்தில் தகுதிபெற்ற குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் மற்றும் வாடகைக்காரர்களுக்கு 1,000 உணவுக் கூடைகள் விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று பாடாங் தேம்பாக் கம்போங் நிர்வாக செயல்முறை கழக (MPKK) மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.
பினாங்கில் கட்டப்பட்ட முதல் குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் பாடாங் தேம்பாக் அடுக்குமாடி குடியிருப்பு 52 ஆண்டுகள் பழமையானத் திட்டமாகும். இது ஒன்பது ‘பிளாக்’களில்
3,539 வீடுகள் கொண்டுள்ளன.
மேலும், ஈ மற்றும் ஜே ‘பிளாக்’களில் 522 வாடகை வீடுகள் உள்ளன.
தற்போதைய தொற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ள காலக்கட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாடகைக்காரர்களுக்கு உணவுக் கூடைகளை விநியோகிக்க எடுத்த முன்முயற்சிக்கு ஜெக்டிப் மற்றும் அவர் தம் குழுவினருக்கு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஓங் கான் லீ நன்றித் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது பினாங்கு வீட்டு வசதி வாரிய பொது மேலாளர் ஐனுல் ஃபாதிலா சம்சுடியும் கலந்து கொண்டார்.