பிறை – பிறை கிராம சமூக மேலாண்மை கழகமும் (MPKK) பிறை சேவை மையத்தின் இணை ஏற்பாட்டில் சமூக மேம்பாடு, சுற்றுப்புறம், பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு கார்னிவல் அண்மையில் தாமான் பிறை உத்தாமாவில் நடைப்பெற்றது.
இம்முறை சமூக மேம்பாடு, சுற்றுப்புறம், பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு கார்னிவலில் 400-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ மற்றும் பிறை கவுன்சிலர் பொன்னுத்துரை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
“இந்நிகழ்ச்சி அனைத்து இன மக்களுக்கும் நன்மை அளிக்கிறது. இம்மாதிரியான சுகாதார விழிப்புணர்வு நடத்துவதன் வாயிலாக பொது மக்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது” என இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த பின்னர் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தமதுரையில் குறிப்பிட்டார்.
பிறை எம்.பி.பி.கே நடத்திய இந்நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும் பிறை எம்.பி.கே.கே தலைவருமான ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
இந்த பாதுகாப்பு & சுகாதார கார்னிவலில் அடிப்படை சுகாதார பரிசோதனை, பல் பரிசோதனை, கண் பரிசோசனை, இரத்த தான முகாம், சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, மட்டுமின்றி பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்புப் படை மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டன.
மேலும், பெண்களுக்கான கர்ப்பப் பை புற்றுநோய்க்கான பரிசோதனை, சமூக பாதுகாப்பு அமைப்பு கண்காட்சி மற்றும் அரசு முகவர்களின் கூடங்களும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இடம்பெற்றன.
மாநில அரசின் ”தூய்மை, பசுமை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு” என்ற கொள்கையைப் பின்பற்றும் வகையில் இந்நிகழ்ச்சி இடம்பெறுவதாக ஶ்ரீ சங்கர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், வர்ணம் தீட்டும் போட்டியில் வெற்றிப் பெற்ற சிறுவர்களுக்கு சான்றிதழும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு வெற்றி பெற பெரும் உதவி புரிந்த அனைவருக்கும் ஸ்ரீ சங்கர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.