கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கோல்களைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ்நாடு மட்டுமின்றி நம் மலேசியாவிலும் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. கையில் கோல்களை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்புப் பெற்ற ஒன்று.
நிறங்கள் தீட்டப்பட்ட கோல்களைக் கொண்டு தாளத்திற்கும் இசைக்கும் ஏற்றவாறு தட்டி ஆடப்படுவது கோலாட்டம். கோலாட்டம் பல பகுதிகளில் மிகவும் கோலாகலமாக நிகழும் நிகழ்த்துக் கலை ஆகும். இதனை ‘வசந்த கால விளையாட்டு’ என்றும் கூறுவர். கோலாட்டம் ஆடும் பெண்களின் கைகளில் வைத்திருக்கும் இரண்டு கோல்களை ஒன்றுடன் ஒன்று மோதி ஒலியெழுப்பி ஆடுவர்.
பினாங்கு இந்துதர்ம மாமன்றம் ஏற்பாட்டில் ஹொங் செங் எனும் தோட்டத்தில் சிறுவர்களுக்கு இந்த கோலாட்டம் கலையை ஆசிரியர் ரோசிலின் கற்பித்து வருகின்றார்.
இதன் தொடர்பாக முத்து செய்தி நாளிதழ் நிருபர் அவர்களை நேர்காணல் மேற்கொண்ட போது கடந்த மார்ச் மாதம் இக்கலையை அங்குள்ள சிறுவர்கள் பயில தொடங்கியதாக தெரிவித்தார்.
ஒரு சில சிறுவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த வகுப்பு தற்போது 12 சிறுவர்கள் இக்கலையை கற்று பயன்பெறுகின்றனர்.இந்த வகுப்பு இலவசமாக ஒவ்வொரு செவ்வாய் கிழமை ஆதி முனீஸ்வரர் ஆலயத்தில் மாலை 6.30 தொடங்கி மாலை 7.30 வரை நடைபெறுகின்றது.
மேலும், இந்த சிறுவர்களுக்கு கோலாட்டம் வகுப்பு நடத்த பினாங்கு இந்துதர்ம மாமன்ற அருள்நிலைய தலைவர் தனபாலன் வழங்கினார். பினாங்கு இந்துதர்ம மாமன்ற அருள்நிலையம் சமூகநலன், கல்வி மற்றும் பல கோணங்களில் இந்தியர்களின் நலனுக்காக சேவையை வழங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம் உடல் மற்றும் மனநலத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சமூக உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
அதோடு, உடலின் சக்தியை அதிகரிக்கிறது, சிறந்த உடல் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.மேலும், மன அழுத்தத்தை குறைத்து, குழுவினருடன் ஒற்றுமையுடன் செயல்பட கற்றுக்கொடுக்கிறது.
ஆகவே, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது மரபு மற்றும் கலாச்சாரத்தை பேணுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது என ரோசிலின் விரிவாக விளக்கமளித்தார்.
பினாங்கு இந்துதர்ம மாமன்ற அருள்நிலையத்தின் கோலாட்டம், தேவாரம் வகுப்புகளில் பங்கேற்கவிரும்பும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவர்களை தொடர்புக் கொள்ளலாம்.