தமிழ்ப்பள்ளி பாலர்ப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு ஏதேனும் எதிர்ப்பாராத சம்பவங்கள் அல்லது விபத்துகள் பள்ளி வளாகத்தில் நேரும்பொழுது அவசர சிகிச்சை அளிக்க ஆசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அண்மையில் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக்குழுவும் பினாங்கு கல்வி மன்றமும் இணைந்து முதலுதவி, சி.பி.ஆர் அடிப்படை பயிற்சியை ஏற்பாடு செய்து நடத்தினர்.
இப்பயிற்சி முகாம் கடந்த மே மாதம் 28-29 வரை இரண்டு நாட்களுக்கு பிறை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் பினாங்கு தமிழ் பாலர்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தனர். முதலுதவி, சி.பி.ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 24 பாலர்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் முதலுதவி, சி.பி.ஆர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து கொண்டு தேர்ச்சிப் பெற்ற 24 பாலர்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் எடுத்து வழங்கினார்.
இதனிடையே, நிகழ்வில் சிறப்புரை வழங்கிய பேராசிரியர் ஆபத்து அவசர வேளையில் மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் அறிந்து வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். ஒரு சம்பவம் நிகழ்வதற்கு முன் அதற்காக நம்மைத் தயார்படுத்தி கொள்வது அவசியமாகும். குறிப்பாக, பாலர்ப்பள்ளியில் பயிலும் சிறுப்பிள்ளைகளுக்கு முதலுதவி வழங்க தனி நுணுக்கம் அறிந்திருப்பது முக்கியமாகும். எனவே, இந்த பயிற்சியில் மலேசிய செம்பிறை சங்கத்தின் ஈடுப்பாடும் ஆதரவும் பாராட்டக்குறியது என்றார் பேராசிரியர்