ஜார்ச்டவுன் – கெர்னி டிரைவ் சாலை அருகில் அமைந்துள்ள, கெர்னி பே திட்டம் (முன்னர் கெர்னி வார்ஃப் என்று அழைக்கப்பட்டது) தனித்துவமிக்க கடற்பகுதி பொதுப் பூங்காவாக உருமாற்றம் கண்டு வருகிறது.
இத்திட்டம் வருகின்ற 2025 இல் நிறைவுக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இத்திட்டத்தின் வளர்ச்சியை நாளுக்கு நாள் கண் கூடாகக் காண முடிகின்றது.
பராமரிப்பு அரசாங்கத்தின் உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டிப் சிங் டியோ கூறுகையில், கெர்னி பே திட்டத்தின் முதல் பிரிவு இம்மாதம் பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“முதல் கட்டம், இந்த மாதத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மக்களுக்கான சேவையை வழங்குவதே மிக முக்கியமானது,” என இன்று கெர்னி பே மேம்பாட்டுத் தலத்திற்கு வருகையளித்தப் பின்னர்
ஜக்டிப் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இந்த மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்தவுடன், போதுமான வாகன நிறுத்துமிடம் இருக்கும் என்று ஜக்டிப் கூறினார்.
மாநிலத்தின் பசுமை மற்றும் பினாங்கு2030 இலக்குக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஜக்டிப், கெர்னி பேவில் சுமார் 10,000 மரங்கள் நடுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
“கெர்னி பே திட்டத்தில் பினாங்கு பசுமை திட்டம் 2030 கூறுகள் இணைக்கப்படுவதை
நாங்கள் உறுதி செய்வோம்,” என்று அவர் கூறினார்.
2016 இல் தொடங்கப்பட்ட கெர்னி பே திட்டம், கெர்னி டிரைவிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இத்திட்டம் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 என பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரிவில், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, ‘skate’ பூங்கா, கண்காணிப்பு மேல்தட்டுத் தளம் (south vantage point), பொதுக் கழிப்பறைகள், பாதசாரிகளுக்கான நடைபாதை, அங்காடிக் கடைகள், சில்லறைக் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா, ஹாக்கர் கியோஸ்க்குகள், திறந்த வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், பிரிவு 2 என்பது ஒரு அங்காடி உணவகம், சில்லறை வியாபாரப் பகுதி, பொதுக் கழிப்பறைகள், கண்காணிப்பு மேல்தட்டுத் தளம் (வடக்கு பகுதி),கூடுதல் வியாபாரிகளுக்கான கியோஸ்க்குகள், வாகன நிறுத்தும் கட்டிடம், திறந்த வாகன நிறுத்தும் இடம், , சூராவ், நீர்வழி டாக்சிகளுக்கான ஜெத்தி, மனிதனால் உருவாக்கப்பட்ட கடற்கரை மற்றும் மற்றும் பல இடங்கள் உள்ளடங்கும்.