புக்கிட் மெர்தாஜாம் – பினாங்கு2030 இலக்கின் வழிகாட்டலுக்கு இணங்க சமநிலையான வளர்ச்சிக்கான முன்முயற்சி திட்டங்களை ஆதரிக்க சமூகம் மற்றும் குடிமக்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவை மேலும் தீவிரப்படுத்தப்படும்.
- பத்து காவான் நாடாளுமன்ற சேவை மையம், கெபுன் சீரே கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) மற்றும் பினாங்கு முய் தாய் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த கெபுன் சிரே & பினாங்கு2030 விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.இவ்விழா மிகுந்த ஆரவாரத்துடன் நடைபெற்றது. சமூகத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பன்முக கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக, இந்த நிகழ்ச்சி பலரையும் மகிழ்ச்சியில் பங்கேற்க ஈர்த்தது.
- பினாங்கு மாநில முதலமைச்சரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறுகையில், மாநில அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், சமூக முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கு ஏராளமான மக்கள் கூடியிருப்பதைக் காண்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது சமூகத்தில் அனைவரின் உயர் மட்ட பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.
- இந்த விழாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக முய் தாய் (Muay Thai) இடம்பெற்றது. இப்போட்டியில், 3 நிபுணத்துவப் போட்டிகள் மற்றும் 20 அமெச்சூர் போட்டிகள் அடங்கும், மொத்தம் 46 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இது பினாங்கில் முய் தாய் விளையாட்டின் நேர்மறையான வளர்ச்சியை நிரூபிக்கிறது.
மேலும், தற்காப்புக் கலையான முய் தாய் போட்டி தற்போது படிப்படியாக அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதோடு, மலேசிய விளையாட்டு (SUKMA), தென்கிழக்கு ஆசிய வியைாட்டு(Sukan SEA) மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் முய் தாய் முக்கிய போட்டியாகக் கருதப்படுகிறது.எனவே, இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்வதன் மூலம் மாநில அரசு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் சமூகப் பங்களிப்பிற்கும் துணைபுரிகிறது.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பினாங்கு2030 இலக்கானது, மாநிலத்தில் பொருளாதாரம், தொழில், வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, சமூகம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் சமநிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும், அதே நேரத்தில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக மாறுவதை நோக்கி பயணிக்கவும் வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில், புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ் லியோங், கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) தலைவர் அப்துல் ஹலிம் பின் அஹ்மட் பினாங்கு முய் தாய் சங்கத் தலைவர் ஹில்மி பின் இப்ராஹிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மாநில அரசாங்கத்தின் முன்முயற்சி திட்டங்களுக்கு உறுதுணையாக நின்று செயல்படும் மாநில அரசு இயந்திரம், MPKK உட்பட ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மாநில அரசு சாரா நிறுவனங்களுக்கும் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.
“அதுமட்டுமின்றி, பினாங்கு மாநிலத்தில் அதிகமான பெருந்திட்டங்களுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு முதலீடுகளும் கொண்டு வரப்படுவதால், நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் இலக்குகளையும் 2030 க்குள் அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.