பினாங்கின் நான்கு பொது பொழுது போக்கு பூங்காக்கள் பயன்பாட்டிற்குத் தடை.

Admin

 

புக்கிட் மெர்தாஜாம் – பினாங்கு மாநிலத்தில் உள்ள நான்கு பொது பொழுதுப் போக்கு பூங்காக்களும் இன்று தொடங்கி மெது நடையோட்டம் (ஜாக்கிங்) மற்றும் மலை ஏறும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகள் தொடர்பில் அண்மையில் அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) காரணமாக பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஜனவரி, 13 முதல் 26 வரை பி.கே.பி அமலாக்கத்தின் நான்காவது நாளான இன்று முத்துச்செய்திகள் நாளிதழ் பொது பொழுதுபோக்கு இடங்களுக்கு நேரில் சென்று முகநூல் வாயிலாக நேரடி செய்தி ஒளிப்பரப்புச் செய்தது.

தேசிய பாதுகாப்பு மன்றம்(எம்.கே.என்) மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க, பினாங்கில் தீவு மற்றும் செபராங் பிறையில் பிரதான நான்கு சுற்றுச்சூழல்-வன பூங்காக்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

செரோக் தோக் கூன் (புக்கிட் மெர்தாஜாம், மத்திய செபராங் பிறை); புக்கிட் பஞ்சோர் வன சுற்றுச்சூழல் பூங்கா (ஜாவி, தென் செபெராங் பிறை மாவட்டம்); ஆயிர் ஈத்தாம் டாலாம் கல்வி வனப்பகுதி (சுங்கை டுவா, வட செபராங் பிறை மாவட்டம்) மற்றும் தாமான் நெகாரா (தீவுப்பகுதி) ஆகிய பொது பொழுதுப் போக்கு பூங்காக்கள் பொது மக்களின் பயன்பாடுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணி முதல் ஒரு கணக்கெடுப்பில் வருகையாளர்கள் ‘ஜாகிங்’ போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்படுவதைக் கண்டறியப்படுகிறது.

தற்போதைய பி.கே.பி 2.0 காலக்கட்டத்தில், மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் ஜாகிங் நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதுவும், வீடமைப்புப் பகுதியில் மட்டுமே மேற்கொள்ள முடியும். பொது பொழுதுபோக்கு பூங்காக்களில் இந்நடவடிக்கைகள் முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செரோக் தொக் கூன் பொழுது போக்கு பூங்காவில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், பொது மக்களுக்கு இவ்வறிப்பு அறியாத காரணத்தால் இன்னும் இங்கு வருகையாளர்கள் வருவதை காண முடிகிறது.

பொதுமக்கள் மத்திய அரசின் அறிவிப்பிற்கு செவிச்சாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள்(எஸ்.ஓ.பி) பின்பற்றி கோவிட்-19 சங்கிலியை துடைத்தொழிக்க ஒத்துழைப்பை நல்க அறிவுறுத்தப்படுகின்றனர்.