பிறை – சுங்கை பிறையில்
துடுப்புப் படகோட்டம் மற்றும் ‘ரிவர் க்ரூஸ்'(படகு சுற்றுலா) நடவடிக்கைகள் செயல்படுத்த மொத்தம் ஐந்து புதிய ஜெத்திகள் அங்கு அமைக்க இணக்கம் கொள்கிறது.
இந்த திட்டத்திற்காக மாநகர் கழகம் ஒரு சிறப்பு பணிக்குழுவை நியமித்துள்ளது என செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ அசார் அர்ஷாத் கூறினார்.
“இப்பணிக்குழு, சுங்கை பிறை நதியை அழகுப்படுத்தும் பொருட்டு பிற மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
“புதிய ஐந்து ஜெத்திகள் அமைப்பதற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரிம2 மில்லியன் ஆகும். ஆயினும், இந்தப் பணிக்குழு இத்திட்டத்தை இறுதிச் செய்வதற்கு முன் இத்திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும்.
“ஐந்து ஜெத்திகளும் சுங்கை பிறை வழியாக செபராங் ஜெயாவில் தொடங்கி பாகான் டாலாம் வரை வெவ்வேறு இடங்களில் கட்டப்படும்.
“இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று அசார் அர்ஷாத் செய்தியாளர்களிடம் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் உடன் பிறையில் உள்ள மயில் பூங்காவிற்கு வருகையளித்தப்போது, இவ்வாறு கூறினார்.
இந்த நதிப் பகுதியில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சுங்கை பிறையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த முடியும் என்று சாவ் கூறினார்.
“வெளிப்புற நடவடிக்கையை விரும்புவோருக்கு இந்த துடுப்புப் படகோட்டம்
ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகத் திகழும். மேலும், சுங்கை பிறையை சுற்றுலாத்தலமாக மேன்மை அடைய வழி வகுக்கும்.
‘ரிவர் க்ரூஸ்’ மூலம், ஐந்து கிலோமீட்டர் சுங்கை பிறை வழியாக பயணிகள் பயணிப்பதன் மூலம் அற்புதமான காட்சியைம் கண்டு மகிழலாம். பினாங்கில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் சுற்றுலா தயாரிப்பு தலங்களாகவும் மேம்படுத்த/முடியும். இதனால், செபராங் பிறை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும்.
“மேலும், இது போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் செபராங் பிறையை வேளாண் சுற்றுலா தலமாக மேம்படுத்த எம்.பி.எஸ்.பி மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பாராட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
சாவ் மற்றும் அரசியல் தலைவர்கள் பத்து காவானில் ‘ஜெலாஜா ❤️ பினாங்கு’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மயில் பூங்காவிற்கு வருகையளித்தனர்.
முதல்வருடன் இணைந்து இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு மற்றும் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் டேவிட் மார்ஷல் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேராசிரியர் ப.இராமசாமி தாமான் கிம்சாரில் இருந்து தாமான் இண்ராவாசே வரை நடைப்பாதை மற்றும் தாமான் கிம்சாரில் இருந்து தாமான் துங்குவை இணைக்கும் நடைப்பாதை நிர்மாணிப்பும் விரைவில் செயல்படுத்தப்படும், என்றார்.
இதன்மூலம், சுங்கை பிறையின் இயற்கை அழகைக் கண்டு களிக்கவும் குடும்பத்துடன் பயனுள்ள நேரத்தைச் செலவிடவும் சிறந்த தலமாக இவ்விடம் திகழும் என பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.
மயில் பூங்கா என்பது பிறை சட்டமன்ற சேவை மையம், எம்.பி.எஸ்.பி மற்றும் மயில்களின் உரிமையாளரான திரு டி.பரந்தாமன் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உதித்தத் திட்டமாகும்.
இத்திட்டம் ரிம300,000 செலவில் நிறைவடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு பறவைக் கூட்டத்தில் ஒன்பது இனங்களைச் சேர்ந்த சுமார் 50 மயில்கள் உள்ளன.
பிறை தொகுதியில் பொது மக்களை நேரடியாகச் சந்தித்த வேளையில் அங்கு எதிர்நோக்கப்படும் பல பிரச்சனைகளும் எழுப்பப்பட்டது.
பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன் வைத்த போக்குவரத்து நெரிசல்; வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை; உணவக வளாகம் மற்றும் தாமான் சாய் லெங் பார்க் பொதுச் சந்தை மேம்படுத்தல் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும், என்றார்.
உள்ளூர் மக்களின் தேவைகள் அதிகாக இருக்கும் வேளையில் மாநில அரசின் நிதி ஒதுக்கீடு வரையறுக்கப்படுகிறது, என்றார்.
எனவே, பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த மேம்பாட்டுப் பணிகள் பரிந்துரைக்கப்படும், என நம்பிக்கைத் தெரிவித்தார்.