ஜார்ச்டவுன் – 2022 ஆம் ஆண்டிற்கான பினாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தயாரிப்பில் (GDP) உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டு பெரிய உந்துசக்தியாகத் திகழ்கின்றன.
பினாங்கு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறை 48.3% பங்களிப்பதாகவும், சேவைத் துறை 46.7% பங்களிப்பதாகவும் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
“பினாங்கு மாநிலம் உற்பத்தித் துறையில் 15.9% இரட்டை இலக்கு வளர்ச்சியைக் கண்டது. அதேவேளையில், 2021 இல் 2.1% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது சேவைத் துறை 11.3% வளர்ச்சியைப் பதிவு செய்தது.
“2022 இல் பினாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பிற துறைகளில் கட்டுமானத் துறை, விவசாயத் துறை, சுரங்கம் மற்றும் குவாரித் துறைகள் அடங்கும்.
“ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்திற்கு 7.4% பங்களித்துள்ளது. முந்தைய ஆண்டை விட பினாங்கின் பங்களிப்பு 0.3% அதிகரித்துள்ளது,” என்று பினாங்கு சட்டமன்ற அமர்வின் போது கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் லீ பூன் ஹெங்கின் வாய்மொழி கேள்விக்கு சாவ் இவ்வாறு பதிலளித்தார்.
லீயின் துணைக் கேள்விக்கு பதிலளித்த சாவ், கடந்த 50 ஆண்டுகால தொழில்மயமாக்கலில் பினாங்கு முன்னெடுத்துச் செல்லும் நிலையில் இருந்து பின் வாங்காது.
“நாங்கள் மற்ற இடங்களைக் காட்டிலும் போட்டி விளிம்பில் இருக்கிறோம். ஆயினும், நாம் முன்னேக்கிச் செல்ல முயற்சி செய்ய வேண்டுமே தவிர மனநிறைவு கொள்ளக்கூடாது.
“மனித வளத்தின் வளர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மனித வளத்தை வளர்ப்பதில் போதிய கவனம் இல்லாத நிலையில் முதலீடுகளை நிறைவேற்றுவது சாத்தியமற்றதாகி விடுகிறது,” என்று சாவ் விளக்கினார்.