பினாங்கில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஓர் ஆலயம் கூட உடைக்கப்படவில்லை–பேராசிரியர்.

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியில் மலேசியாவில் முதல் இந்திய அருங்காட்சியகம் அறப்பணி வாரிய வளாகத்தில் நிறுவப்பட்டு அண்மையில் திறப்பு விழாக் கண்டது. இந்த அருங்காட்சியகம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று (14/4/2019)
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் இந்தியா உயர் ஆணையர் மாண்புமிகு ஶ்ரீ மிரிதுல் குமார் ஆகியோரால் கோலாகலமாக திறப்பு விழாக் கண்டது.

காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்திய பாரம்பரிய பொருட்களை வருகையாளர்கள் பார்வையிட்டனர்.

200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இங்கு வந்த இந்தியர்களின் வரலாற்றுகளையும் மரபுகளையும் அடையாளங்கண்டு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என தமதுரையில் குறிப்பிட்டார் பேராசிரியர். மாநில அரசு வழங்கிய இந்நிலத்தில் இந்தியர்களுக்கு நன்மையளிக்கும் இத்திட்டத்தை கொண்டுவந்ததற்கு தாம் பெருமிதம் கொள்வதாகவும் இதனை மெய்ப்பிக்க துணைபுரிந்த அறப்பணி வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இராமசந்திரனுக்கும் தனது நன்றியை நவிழ்ந்தார்.

“பினாங்கு மாநிலத்தில் இன, மத, சமயம் பேதமின்றி தற்போது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் முற்றிலும் இணக்கமாக உள்ளது” என்று ராமசாமி உறுதிப்படுத்தினார். மேலும், மாநில அரசு பல்வேறு கலாச்சார அம்சங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவது இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா சித்தரிக்கின்றது. இந்த அருங்காட்சியகம், மாநில மற்றும் மலேசிய இந்திய பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு பெரிய மையக்கல்லாக திகழ்கிறது.

இந்தியர்களுன் பண்டைய கால உபயோக பொருட்கள்

“பினாங்கு மாநில அரசு அறிவித்தது போல இங்கு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஓர் ஆலயம் கூட உடைக்கப்படவில்லை; மாறாக ஆலயங்கள் பாதுகாக்கப்படுகின்றன; மேம்பாட்டுத் திட்டங்களால் பாதிக்கப்படும் ஆலயங்களை மற்றொரு இடங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன; எனவே, பினாங்கில் ஆலயம் உடைக்கப்படுவது வருங்காலங்களிலும் நிகழாது”, என இந்து அறப்பணி வாரிய தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், “இந்தியா மற்றும் பினாங்கு இடையே சுமுகமான உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது, இதனிடையே, நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மலேசியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்து அறப்பணி வாரியம் அமைக்க மத்திய அரசுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்து அறப்பணி வாரியம் அமைப்பது தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பிற மாநிலங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரச்சாரம் நடத்தப்படுகின்றன.

இதனிடையே, நிகழ்வில் சிறப்புரை வழங்கிய இந்தியா உயர் ஆணையர் மாண்புமிகு ஶ்ரீ மிரிதுல் குமார் பினாங்கு வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் தனது சித்திரை புத்தாண்டு, விஷு மற்றும் வைசாக்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். பினாங்கில் இந்தியர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமையும் மரியாதையும் தமக்கு பெருமிதம் அளிப்பதாக முதல் முறையாக பினாங்கிற்கு வருகையளித்த அவர் குறிப்பிட்டார். இந்திய சமூகத்தினர் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ வேண்டும் என ஆணையர் கேட்டுக் கொண்டார்.

தற்போது ஐந்து பிரிவுகளாக திறக்கப்பட்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரிய இந்திய அருங்காட்சியகம் இந்தியர்களின் பண்டைய காலத்து தொழில் திறன், அவர்கள் இந்தியாவில் இருந்து பினாங்கிற்கு வருகையளித்த கப்பல் மற்றும் பயணச் சீட்டு காட்சி, இந்தியர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், குழந்தைகள் பொருட்கள், திருமண வைபவ காட்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் என ஐந்து பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இந்தியர்கள் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் வெகுவாக கவரும் என்பது வெள்ளிடைமலை..