பினாங்கில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான திட்டம் தொடக்கம் – முதல்வர்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கில் உள்ள 10 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் பென்டேலி கல்வியின் (Bentely Education’s ) DIGITECH திட்டத்தில் கலந்து கொண்டு  பயனடைவார்கள். இது STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வியை மேம்படுத்தும் திட்டமாகத் திகழ்கிறது.

பென்ட்லி அமைப்பின் பிராந்திய மூத்த திட்ட மேலாளரான நரேந்திரன் லோகநாதனின் கூற்றுப்படி, இந்த திட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான படிவம் 4 மற்றும் படிவம் 5 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என்றார்.

இத்திட்டத்திற்கானப் பாடத்திட்டத்தை பினாங்கு STEM ஆதரவுடன் ஃபார்வர்ட் பள்ளி இணைந்து வடிவமைக்கும், என்றார்.

“இத்திட்டத்தில் இணைவதற்கு மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதன் மூலம் நாங்கள் சரியான இலக்குக் குழுவைத் தேர்ந்தெடுக்க முடியும்.

“முதல் வருடப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் அடிப்படை கணினி திறன்களைக் கற்றுக்கொள்வார்கள். மேலும், ஒரு மென்பொருள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அதோடு குறியீடு எவ்வாறு மேம்படுத்தப்படுகிறது என்பதைக் கற்றுக்கொள்வார்கள்.

“இரண்டாம் ஆண்டில், நிஜ உலகில் உள்ள உள்கட்டமைப்பு பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களுக்கு இருக்கும் கணினி
ஆற்றலைக் கொண்டு எவ்வாறு தீர்வுக்காண்பது என அவர்களுக்கு கற்பிக்கப்படும்.

“உதாரணமாக, நாங்கள் பினாங்கு தெற்குத் தீவு திட்டத்தை (PSI) செயல்படுத்த வேண்டும். மேலும், இது ஐக்கிய நாடுகளின் 12 நிலையான வளர்ச்சி இலக்குகளை இணைக்க விரும்புவதால் இது எங்கள் போட்டித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று கொம்தாரில் நடைபெற்ற இத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் திட்டத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.

பென்ட்லி கல்வி நிறுவனம் DIGITECH திட்டத்திற்காக ரிம110,000 நிதியுதவி வழங்கியுள்ளது.

சமீபகாலமாக அறிவியல் பிரிவில் கல்வியைத் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது குறித்தும் நரேந்திரன் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே STEM பாடங்களில் ஆர்வத்தைத் தூண்ட வழிவகுக்கும். இத்திட்டம் வெற்றியடைந்தால், நாடு முழுவதும் கொண்டுச் செல்லவும், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கும் கொண்டு செல்லவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், தரமான STEM கல்வியை வழங்குவதற்கும் இளைஞர்களிடையே புத்தாக்கத்திறனையும் வளர்ப்பதற்கும் மாநில அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மையக்கல்லாக அமையும் என்று முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“எங்கள் STEM முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்கட்டமைப்பு கற்றல் பாடத்திட்டத்தை, கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க பென்ட்லி எங்களுக்கு உதவியுள்ளது.

“இது நமது மாணவர்களுக்கு ஒரு துறையைச் சார்ந்த பயிற்சி திறன்களையும் நிஜ உலக அனுபவங்களையும் வழங்குகிறது. இதன் மூலம், நவீன தொழில்துறையில் மனிதவள கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்த முடிகிறது.

“இத்திட்டத்தைத் தவிர, பென்ட்லி கடந்த ஆண்டு கீழ்நிலை இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வடிவமைப்பு-பொறியியல்- உருவாக்கம் திட்டத்தின் மூலமாகவும் நிதியுதவி அளித்துள்ளது. இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது, இதில் மொத்தம் 50 மாணவர்கள் 3D வடிவமைப்பு மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற்றனர்.

“இந்த ஆண்டு, பென்ட்லி மீண்டும் இந்த திட்டத்தை வழிநடத்த ஒப்புக்கொண்டது. இது சுமார் 150 மாணவர்களைக் கொண்ட ஏழு பள்ளிகளை உள்ளடக்கும்,” என்று சாவ் கூறினார்.

“இந்த நிதி ஒதுக்கீடு, மாணவர்களுக்கு நிதியுதவியாக மட்டுமின்றி எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கும் அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கும் ஊக்கமளிக்கும் ஆதாரமாகவும் அமைகிறது”, என மாநில முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.