பினாங்கில் எம்.ஐ.தி.ஐ அனுமதி பெற்ற கடைகள் நாளை முதல் செயல்படும் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் (எம்.ஐ.தி.ஐ) ஒப்புதல் பெற்ற மின்சார மற்றும் மின்னணு பொ
ருட்கள் மற்றும் சலவை கடைகள் நாளை (ஏப்ரல் 24, 2020) தொடங்கி காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

எனினும்,
பினாங்கு சிறப்பு பாதுகாப்புக் குழு (ஜே.கே.கே.என்) இன்று நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு இந்த கூடுதல் துறைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தீர்மானித்துள்ளதை கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலையில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அறிவித்தார்.

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையின் காலவரை இன்னும் முடியாத வேளையில், அதனை பின்பற்றுவதும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதும் அவசியம்; இதன் வழி தொடர்ந்து கோவிட்-19 வழக்குகள் சுழியமாக பதிவாகுவதை உறுதிப்படுத்த முடியும் என மாநில முதல்வர் சாவ் வலியுறுத்தினார்.

இதனிடையே, நாளை முதல் ரமடான் நோன்பு தொடங்கவிருப்பதால் இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைத்து முஸ்லிம் நண்பர்களும் இந்த நோன்பு விருதத்தை முழு மனதுடனும் நெறியுடனும் கடைப்பிடிக்க வேண்டும் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கொன் யாவ் வேண்டுகோள் விடுத்தார்.

தொழுகை, ரமடான் சந்தை போன்ற வழக்கமான விஷயங்கள் வழக்கம் போல் தொடரப் போவதில்லை என்றாலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அறிவுறுத்தல்களைத் நினைவில் கொண்டு மதக் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்ற முற்படுவோம்; மேலும், பினாங்கு வாழ் இஸ்லாம் அல்லாத சமூகத்தினர் இஸ்லாம் சமூகத்தினர் ரமலான் நோன்பினை நல்ல முறையில் நிறைவேற்ற இயன்ற ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்,” என மாநில முதல்வர் கோரிக்கை முன்வைத்தார்.

கடந்த ஆண்டுகளைப் போல, ரமலான் சந்தைக்கு நடத்த தடை விதித்துள்ளதால் ரமலான் சந்தை வியாபாரிகளும் சிறு வணிகர்களுக்கும் உதவ, இரு ஊராட்சி மன்றங்களும் மின்னியல் ரமலான் சந்தை மற்றும் இ-பஜார் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இத்திட்டம் சிறு வியாபாரிகள் மற்றும் முஸ்லிம்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று மாநில அரசு நம்புகின்றது.

தொடர்ந்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடரப்படுமா இல்லையா என்று தெரியாத நிலையில் பாதுகாப்பு காரணிகளைக் கருத்தில் கொண்டு, முதலாம் துணை முதல்வரும் பினாங்கு இஸ்லாமிய மத அலுவல்கள் தலைவருமான டத்தோ ஹஜி அமாட் சாகியுடின் பினாங்கில் மசூதி மற்றும் சுராவ்களில் தொழுகைகள் நடைப்பெறாது என்றும் முஸ்லிம்களும் தங்கள் வீடுகளில் “தராவி” தொழுகையை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதை மாநில முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். எவ்வாறாயினும், ‘சாகாட்’ உதவிகள் தேவைப்படுவோருக்கு வழங்கப்படுவதை மாநில அரசு உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ‘பெஸ்ட் குரூப்’ தனியார் நிறுவனம் இன்று ரிம150,000 பினாங்கு கோவிட்-19 நிதியத்திற்கு வழங்கியுள்ளது. இதனை அந்நிறுவன தலைவர் டத்தோ எம்.கே கூங் மாநில முதல்வர் சாவ் கொன் யாவிடம் நன்கொடைக்கான காசோலையை வழங்கினார்.