கெபூன் பூங்கா – பினாங்கு மாநில புதிய காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ நரேனசாகரன் அண்மையில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் உடன் அதிகாரப்பூர்வ சந்திப்பு மேற்கொண்டார். முன்னாள் பினாங்கு காவல்துறை தலைவர் டத்தோ தெய்வீகன் பதவி ஓய்வுப்பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு இந்தியர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.
இச்சந்திப்புக் கூட்டத்தில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.ராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மற்றும் புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிரிஸ் லீ சூன் கிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்புக் கூட்டத்தின் போது டத்தோ நரேனசகரன் பினாங்கு மாநிலத்தில் குற்றச்செயல்களை துடைத்தொழிக்க பினாங்கு மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் ஏற்படும் குற்றச்செயல்களை எதிர்கொள்வது பெரிய சவாலாக அமைகிறது; ஏனெனில் இது இம்மாநில மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், சூதாட்டம், குண்டர் கும்பல் போன்ற பிரச்சனைக்கு காவல்துறையினர் முன்னுரிமை வழங்குவர் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் சந்தேகத்திற்குரிய தகவல்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சூளுரைத்தார். கிந்தா, பேராவை சேர்ந்த டத்தோ நரேனசாகரன் இதற்கு முன்னர் புக்கிட் அமான் நிர்வாகத் துறையில் மேலாண்மை துணை இயக்குனராக (பயிற்சி) பணியாற்றியுள்ளார். 30 ஆண்டுகள் இவருக்கு குற்றச்செயல் பிரிவில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் டத்தோ நரேனசகரன் பினாங்கு காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.