பெர்தாம் – பினாங்கில் மின்கல உற்பத்தியாளரான INV New Material Technology (M) Sdn Bhd நிறுவனம் தனது முதல் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு ரிம6.4 பில்லியன் முதலீடுச் செய்கிறது.இந்த அடிக்கல் நாட்டு விழா பினாங்கு தொழில்நுட்பப் பூங்கா@பெர்தாம் எனும் இடத்தில் நடைபெற்றது.
தாய் நிறுவனமான ஷென்சென் சீனியர் டெக்னாலஜி மெட்டீரியல் நிறுவனம், லித்தியம் பேட்டரி பிரிவுப்படுத்துவதில் உலகளவில் புகழ்பெற்றது. மேலும், இத்திட்டத்தை பினாங்கில் அமைப்பதற்கு ஆதரவு அளிக்கிறது.
INV நிறுவனத்தின் தலைவரான சென் சியூஃபெங், இது ஆசியான் கண்டத்தின் முதல் லித்தியம் பிரிவுப்படுத்தும் தொழிற்சாலையாகவும் பினாங்கில் பிரதான இடத்தில் அமைக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இத்திட்டம் ரிம6.4 பில்லியன் முதலீட்டில், இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். முதல் கட்டம் 2026- ஆண்டிலும், இரண்டாம் கட்டம் 2028-ஆண்டிலும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“66 ஏக்கர் பரப்பளவில் சுமார் 400,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட INV ஆலையானது, ஆசியாவில் குறைந்த கார்பன் பிரிப்பான்களுக்கான மிகப்பெரிய உற்பத்தித் தளமாக செயல்படும். மேலும், தொழில்துறைக்கான உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கிய பங்காளராகத் திகழும்.
“இத்துறையில் முன்னணி நிறுவனமாகவும், ஆசியான் சந்தையை மேம்படுத்துவதிலும், உலக வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தை அமைப்பதிலும், நமது எல்லைகளுக்கு அப்பால் அறிவார்ந்த உற்பத்தியைக் கொண்டு வருவதிலும், ஆசியான் கண்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் புதிய உந்துச்சக்தியைப் புகுத்துவதிலும் எங்களது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்துவோம்,” அவர் தெரிவித்தார்.
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதற்காக INV மற்றும் Shenzhen சீனியர் டெக்னாலஜி மெட்டீரியல் நிறுவனங்களுக்கு பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வாழ்த்துத் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலம் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், INV அதன் ஆலையை நிர்மாணிக்கும் இடமாக பினாங்கை தேர்வுச் செய்யப்பட்டதில் பெருமை கொள்வதாக சாவ் வெளிப்படுத்தினார்.
“மேம்பட்ட உற்பத்திக்கான மையமாக பினாங்கின் நிலையை உறுதிப்படுத்த, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான முதலீட்டை மேம்படுத்துவதில் வலுவான அர்ப்பணிப்புகளைக் கொண்ட நிறுவனங்களை ஈர்ப்பதில் மாநில அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
“லித்தியம்-அயன் மின்கலன் பிரிப்பான் தொழில்துறையானது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார வாகனங்களுடனான அதன் இணைப்புடன், பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான பினாங்கின் இலக்குகளுடன் பயணிக்கிறது,” என்று அவர் கூறினார்.
“நாங்கள் பினாங்கின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு எதிர்கால ஆதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், திறன் மிக்க தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கும் உறுதிபாடு கொள்கிறோம். இவை அனைத்தும் பினாங்கில் நிலையான முதலீட்டு சூழலை உறுதி செய்ய தயாராக உள்ளது,” என்று சாவ் விளக்கமளித்தார்.
மேலும், பினாங்கில் உள்ள சீனத் தூதரகத் தூதுவர் சோ யூபின், செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ அசார் அர்ஷாத், இன்வெஸ்ட்பினாங் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், பினாங்கு மிடா (மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம்) இயக்குநர் முஹம்மது கடாபி சர்தார் முகமது மற்றும் மிடா துணை தலைமை நிர்வாக அதிகாரி சிவசூரியமூர்த்தி சுந்தர ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.