பினாங்கில் ஜப்பான் நிறுவனம் புதிய உற்பத்தி பிரிவை தொடங்கியது

Admin

பத்து காவான் – உலகின் முன்னணி உலகளாவிய வெற்றிட (vacuum) உற்பத்தியாளரான EBARA குழுமம், மலேசியாவை தளமாகக் கொண்ட அதன் துணை நிறுவனம் Ebara Precision Machinery சென் பெர்ஹாட் இன் புதிய உற்பத்தி பிரிவை பத்து காவான் தொழில் பூங்காவில் (BKIP) இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.

EBARA என்பது ‘wafers’, திரவப் படிகங்கள், சூரிய மின்கலன்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படும் பிற தயாரிப்புகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வெற்றிட மற்றும் குறைக்கடத்தி அமைப்புகளின் உலகளாவிய முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது.

மலேசிய Ebara Precision Machinery நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தகாஷி சுகியாமா கூறுகையில், இந்நிறுவனத்தின் முதல் மேம்பட்ட உற்பத்தி பிரிவு பினாங்கு மாநிலத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

“எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களை உள்ளடக்கிய எங்கள் விநியோகச் சங்கிலியுடன் நெருக்கமாக இருப்பதால், பத்து காவானில் எங்கள் ஆலையை அமைக்க நாங்கள் தேர்வுச் செய்கிறோம்.

“மேலும் ரிம30.4 மில்லியன் முதலீட்டு மதிப்புடன், இந்நிறுவனம் குறைக்கடத்தி, LED மற்றும் மின்னணுத் தொழில்களில் வளர்ந்து வரும் சந்தை தேவையைப் பூர்த்தி செய்ய மதிப்பு மிகுதியானத் தயாரிப்புகள் மற்றும் தரமான சேவைகளை வழங்கும்.

“இந்தப் புதிய உற்பத்தி பிரிவில், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்; சேவை வழங்குதல் மற்றும் Ebara இன்
உலர் வெற்றிட பம்புகள் மற்றும் பிற தொடர்புடைய உபகரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும்,” என்று தகாஷி தனது உரையில் கூறினார்.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இன்வெஸ்ட்பினாங்கின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ லூ லீ லியான் மற்றும் பினாங்கு மிடா (மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம்) இயக்குனர் முஹம்மது கடாபி சர்தார் முகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“இது 100 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அத்துடன் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது, இவை அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும். நமது உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்தும்.

“ஜப்பான் நாட்டின் Ebara Precision Machinery நிறுவனம் பினாங்கில் தனது உற்பத்தி பிரிவைத் தொடங்குவதில் மாநில அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

தொழிலியல் வளர்ச்சிக்கு ஏற்ப, பினாங்கு மாநிலத்தின் நிலைத்தன்மைக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று சாவ் மேலும் கூறினார்.

“எங்கள் சாதகமான சூழல் இங்குள்ள தொழிலியல் வீரர்களுக்கு சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு, சமூக உள்ளடக்கம் மற்றும் நெறிமுறை ஆளுமை ஆகியவற்றில் உண்மையான அர்ப்பணிப்புகளை மேற்கொள்வதைக் காண முடிகிறது.

“நிலையான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் நமது மாநிலத்தின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் தீர்வுகளை உருவாக்குவது ஆகியவை நிலையான எதிர்காலத்திற்கான இன்றியமையானது என்பதை மாநில அரசாங்கம் எடுத்துரைக்கிறது.

” மேலும், Ebara Precision Machinery நிறுவனம் நிலையான புத்தாக்கத் திறன், பசுமை தொழில்நுட்பம் மற்றும் பினாங்கில் சுற்றுச்சூழல் சார்ந்த வணிக நடவடிக்கைகள் நடைமுறை படுத்த சிறந்த வழிகாட்டியாக அமையும்.

தனது உரையின் முடிவில், முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதற்கும் திட்டச் செயலாக்கங்களை எளிதாக்குவதற்கும் இன்வெஸ்ட்பினாங்கு மற்றும் மிடாவின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்காக சாவ் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“மாநில அரசு, இன்வெஸ்ட்பினாங்கு மற்றும் பிற தொடர்புடைய மாநிலத் துறைகள் மூலம், முதலீட்டாளர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதில் உறுதிபூண்டுள்ளது. மேலும், Ebara Precision Machinery நிறுவனத்துடன் இணக்கமான உறவைக் கொண்டிருக்க விரும்புகிறேன்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் சாவ் கூறினார்.