இவ்வாண்டு தொடங்கி கடந்த 20 பிப்ரவரி வரை 1,118 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலவரம் கடந்தாண்டின் ஆரம்பக் காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 10.7% அதிகமாகும்.இதனிடையே, இவ்வாண்டில் இதுவரை ஒன்பது டிங்கி காய்ச்சல் இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என கொம்தாரில் நடைபெற்ற பினாங்கில் டிங்கி மற்றும் சீகா(Zika) ஆபாய விளக்கக்கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
மேலும், சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் பினாங்கு மாநிலத்தில் டிங்கி சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளதைக் குறிப்பிட்டார். இப்பணிக்குழு பொதுமக்கள், முகவர்களிடையே நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பை நல்கி டிங்கி காய்ச்சல் பரவுவதை குறைப்பதற்குப் பாடுப்படுவர் என விவரித்தார். அதோடு, ”Combi For Behavioral Impact” எனும் இயக்கம் 2005-ஆம் ஆண்டு பினாங்கில் துவங்கப்பட்டது. தற்போது இந்த இயக்கத்தில் 134 உறுப்பினர் உள்ளனர். இக்குழுவினர்கள் வசிப்பிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகமான துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றனர்.
பினாங்கு மாநில அரசு “டிங்கி அற்ற சமுதாயத்தை” (Komuniti Bebas Denggi ) உருவாக்க இலக்கு கொண்டுள்ளது. எனவே, பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள், பொது இயக்கங்கள் தத்தம் தொகுதிகளில் சுத்தம் செய்தல், விழிப்புணர்வு கருத்தரங்கு, நேரடியாக பொதுமக்களிடம் டிங்கியின் அபாயத்தைப் பற்றி அறிவிக்கும்படி சூளுரைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இதனிடையே, மாநில சுகாதாரத்துறை, பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் ஆகியோர் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு டிங்கி கொசு பரவுவதை தடுத்து உயிரிழப்புகளைக் குறைக்க அரிய முயற்சிகள் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சீகா(Zika) எனும் நோயும் கொசுக்களால் பரவுவதாலும்; இதனால் கர்ப்பத்தில் வளரும் சிசுக்களுக்கு ஆபத்து என்பதால் கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் இருக்க வலியுறுத்தப்படுகின்றனர். கர்ப்பிணி பெண்கள் வழக்கத்திற்கு மாறான மாற்றங்களை உணர்ந்தால் அருகில் இருக்கும் மருத்துவமனைகளை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.