பினாங்கில் திடக்கழிவு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட முதல் ஆலயமாக பாலதண்டாயுதபாணி திகழ்கிறது

Admin
20240422 161340

கெபுன் பூங்கா – “அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம், பினாங்கில் திடக்கழிவு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட முதல் ஆலயமாகத் திகழ்கிறது. இந்த முன்முயற்சி திட்டத்தை குறுகிய காலத்தில் செயல்படுத்திய பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) கவுன்சிலர் விக்னேஷன் @ சுரேஷ் அவர்களை பாராட்டுகிறேன்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பாக இத்திட்டத்தை இந்து ஆலயங்களில் செயல்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கிறோம். இதன் மூலம், சுற்றுச்சூழலை மாசில்லாமல் பாதுகாக்க முடியும்,” என திடக்கழிவு பொருட்களைத் தனிமைப்படுத்தும் மைய தொடக்க விழாவில் இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவரும் செனட்டருமான டாக்டர் லிங்கேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
20240422 161416

“பினாங்கு மாநில அரசின் தூய்மை, பசுமை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பசுமையை மேம்படுத்தும் நோக்கில் பொது மக்களிடையே விழிப்புணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும்.

“பொது மக்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைத் தனிமைப்படுத்தி அதனை திடக்கழிவு சேகரிப்பு மையத்தில் வீச வேண்டும்,” என புக்கிட் பெண்ட்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷீத் இவ்வாறு தெரிவித்தார்.

“பினாங்கு கொடிமலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருநாளையொட்டி இது போன்ற ஒரு மையத்தை அமைக்கும் முயற்சியை முதன்முதலாக பாலதண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் ஆலயத் தலைவர் நரேஷ் குமார் அனுமதியோடு அமைத்தேன்.
“இது தேற்றா பேக், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தும் சேகரிப்பு மையமாக திகழ்கிறது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் கழிவுப் பொருட்களைப் போட வேண்டும்,” என எம்.பி.பி.பி கவுன்சிலர் விக்னேஷன் @ சுரேஷ் கேட்டுக் கொண்டார்.

நவீனமய உலகில் கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இத்தலத்தை பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.

எனவே, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் ஒரு ஆதாரமாக இந்த மையம் அமைந்திருக்கும். அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளுக்கும் இந்த மையம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும்.

இந்த மையம் குறித்து சித்ரா பௌர்ணமி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஒலிபெருக்கி வழியாக அடிக்கடி அறிவிக்கப்படும். இது போன்ற மையம் பின் பல இடங்களிலும் அமைக்கப்படும், என்றார்.

மேலும், இது போன்ற மையம் பினாங்கில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நிறுவ இரண்டு ஊராட்சி மன்றங்கள் வாயிலாக முயற்சிகள் மேலோங்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் புக்கிட் பெண்டேரா சட்டமன்ற உறுப்பினர் லீ பூங் எங் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.