ஜார்ச்டவுன் – இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலர்ந்த பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் 237-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சட்டிப்பூசம் என்று அழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டத்தில் இன்று பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், கல்வி துணை அமைச்சர் லிம் ஹிய் ஹிங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், ஆலய நிர்வாகத்தினருடன் தண்ணீர் பந்தலுக்கும் வருகை மேற்கொண்டு இந்தியர்களுக்கு தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
“பினாங்கு மாநில தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு வருகையளிக்கும் பொது மக்கள் தங்களின் பயணத்தை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். இதன் மூலம், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கத் துணைபுரியும்,” என முதல்வர் கேட்டுக்கொண்டார்.
அரசு நிறுவனங்கள் போக்குவரத்து சீராக இயங்குவதை உறுதி செய்வதோடு பொது மக்களின் பாதுகாப்பையும் சிறந்த முறையில் கண்காணிப்பதற்குத் தமது பாராட்டினைத் தெரிவித்தார். மேலும், ஆலய நிர்வாகத்தினர் தைப்பூசக் கொண்டாட்டத்தை சிறந்த முறையில் ஏற்பாடுச் செய்ததற்கும் பாராட்டினார்.
“மூன்று நாட்களுக்கு அனுசரிக்கப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு 1.5 மில்லியன் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் திரளுவர் என எதிர்ப்பார்க்கப்படுறது,” என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.
“கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தை பக்தர்கள் ஆவலுடன் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் பொது மக்கள் கலந்து கொள்ள இணக்கம் கொள்கின்றனர்,” என்றார்.
இந்த ஆண்டு மக்களின் தாகம் மற்றும் பசியைப் போக்கும் வண்ணம் அதிகமான தண்ணீர் பந்தல்கள் நிருவப்பட்டுள்ளன.