செபராங் ஜெயா – விரைவில் கொண்டாடவிருக்கும் தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச பயணிகள் படகு(feri) சேவை வழங்கப்படும்.
“வருகின்ற ஜனவரி,24 காலை 12.00 மணி தொடங்கி ஜனவரி,26 அதிகாலை 2 மணி வரை அதாவது 50 மணி நேரத்திற்கு இலவசமாக இந்த சேவை வழங்கப்படும்,” என தி லைட் தங்கும்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ புக் அறிவித்தார்.
முதல் முறையாக பினாங்கு மாநிலத்தில் கொண்டாடவிருக்கும் தைப்பூசத்திற்கு இந்த இலவச பயணிகள் படகு சேவை வழங்கப்படுகிறது. இதன் மூலம், பக்தர்கள் பட்டர்வொர்த், சுல்தான் அப்துல் ஹாலிம் ஃபெரி நிலையத்திலிருந்து பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு சுமூகமான பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முன்முயற்சி கையாளப்படுகிறது.
“பினாங்கு மாநிலம் மிகவும் பிரமாண்டமாக அனுசரிக்கப்படும் பல சமயம் சார்ந்த கொண்டாட்டங்களுக்குப் பிரசித்திப்பெற்றது. இந்த முயற்சி வெற்றிப் பெற்றால் வரும் காலங்களில் பிற கொண்டாட்டங்களுக்கும் இலவச சேவை வழங்க பரீசிலிக்கப்படும்,” என அமைச்சர் விளக்கமளித்தார்.
இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பினாங்கு துறைமுகத்திற்கும் பிராசானா மலேசியா பெர்ஹாட் (பினாங்கு) நிறுவனத்திற்கும் அமைச்சர் அந்தோணி லோக் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே, வெல்ட் குவே பேருந்து நிலையத்தில் இருந்து இராபிட் பேருந்து நிறுவனம் குறிப்பிட்ட நேரங்களுக்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு இலவச சேவை வழங்க உத்தேசித்துள்ளது.
ஜனவரி,24 அன்று நண்பகல் 2.00 மணி தொடங்கி அதிகாலை 1.00 மணி வரையும் ஜனவரி,25 அன்று காலை 5.30 மணி தொடங்கி அதிகாலை 1.00 மணி வரை பக்தர்கள் இலவசப் பேருந்து சேவையைப் பெறலாம். 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இந்தப் பேருந்து சேவை பொதுமக்கள் வசதிக்காக வழங்கப்படும்.