*
தஞ்சோங் – பினாங்கு மாநில அரசு நவம்பர் 18 ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்தது. இதன் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வாக்காளர்கள் திட்டமிட்டு தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்று வாக்களிக்க வசதியாகவும், சிலர் விடுமுறைக்குச் செல்வதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த விடுமுறை சீக்கிரமாக அறிவிக்கப்பட்டதாக சாவ் கூறினார்.
வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு உகந்த நேரத்தையும் வசதியையும் அளிக்கும் ஒரே நோக்கத்துடன் நவம்பர் 18 ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது, என்றார்.
“தனியார் துறை இந்த அரசு விடுமுறைக்கு ஒப்பதல் அளிப்பது குறித்து சுயமாக முடிவுச் செய்யலாம். ஆனால், மாநில அரசுத் துறை இதனைப் பின்பற்றும்,” என்று அவர் கூறினார்.
வரும் 15வது பொதுத் தேர்தலில் தஞ்சோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளராக லிம் ஹுய் யிங் மற்றும் மாநில முதல்வர் சாவ் கொன் இயோவ் ஆகியோர் இன்று ஜார்ச்டவுனில் உள்ள சிசில் ஸ்ட்ரீட் சந்தைக்குச் சென்றனர்.
நான்கு முறையாக தஞ்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் சேவையாற்றிய சாவ் கொன் இயோவ்
புதிய வேட்பாளருக்கு வழிவிட்டார்.
பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் இம்முறை அமோக வெற்றிபெறும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஐ.செ.க பொதுச் செயலாளர் அந்தோனி லோக் செய்தியாளர்களிடம் கூறினார்.
“கடந்த பொதுத் தேர்தலில், தாசேக் குளுகோர் மற்றும் கெபாலா பத்தாஸ் ஆகிய இரண்டு நாடாளுமன்ற இடங்களையும் இழந்தோம்.
“நாங்கள் 11 இடங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் மற்ற இரண்டு இடங்களிலும் இந்த முறை போராடி வெற்றிப் பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“அடுத்த சில நாட்களும் அடுத்த வாரமும் மிக முக்கியமானதாகத் திகழ்கிறது. எல்லா இடங்களிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சிறப்பாக நடைபெற கடினமாக உழைப்போம்.
“அரசாங்கத்தை வழிநடத்தும் அதிகாரம் எங்களுக்கு வழங்கப்பட்டால், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்று லோக் செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
பின்னர், லிட்டில் இந்தியா பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற சாவ் மற்றும் லிம் ஹுய் யிங் அங்குள்ள வர்த்தகர்களைச் சந்தித்தனர்.
பிரச்சாரத்தின் போது சாவ் மற்றும் லிம்முடன் பொது மக்கள் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டனர். டீ கடை உரிமையாளர் ஒருவர், சாவ்வுக்கும், அங்கிருந்த உயரதிகாரிகளுக்கும் ‘மசாலா டீ’ கொடுத்தார்.
‘நம்மால் முடியும்’ என்ற ஆரவாரத்துடன் மழையையும் பொருட்படுத்தாமல் ஆதரவாளர்கள் கோஷமிட்டு தங்களின் ஆதரவை ஹரப்பானுக்கு வெளிப்படுத்தினர்.