பினாங்கு மாநிலத்தில் அதிகமாக மழை பெய்யாவிட்டாலும்கூட, இதுவரை இம்மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டு முறை அமல்படுத்தவில்லை; அது போன்று எதிர்வரும் காலங்களிலும் இந்நிலை பினாங்கில் ஏற்பட்டது என தாம் உறுதியாக நம்புவதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார் பினாங்கு நீர் விநியோக வாரிய தலைவர் ஜசானி மைடின்சா.
பினாங்கின் இரண்டு பெரிய அணைகளான ஆயிர் ஈத்தாம் மற்றும் தெலோக் பஹாங் அணையில் கடந்த 18 ஜனவரி 2017-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி தத்தம் 98.1% மற்றும் 100% நீர் சேகரிப்பு உள்ளதாக குறிப்பிட்டார். கடந்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட சூப்பர் எல் நினோ பருவ மாற்றத்தால் வறட்சி நிலை ஏற்பட்ட போதிலும் பினாங்கு மாநிலம் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தவில்லை என ஜசானி சுட்டிக்காட்டினார். பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் திறமையான நிர்வாகத்தினால் இது சாத்தியமாகவுள்ளது. மேலும், பினாங்கில் 575,747 பயனீட்டாளர்கள் உள்ள வேளையில் இவ்வாரியம் நீர்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்தாமல் இருக்க பல மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, பினாங்கிற்கு மூல நீர் சுங்கை மூடா ஆற்றிலிருந்து கிடைக்கும் வேளையில் இவ்வாண்டு வறட்சிக்காலம் தொடர்ந்து நீடித்தால் பெரிஸ் மற்றும் மூடா அணையிலிருந்து நீரை சுங்கை மூடாவிற்கு திறந்துவிடப்பட்டு நீர்ப் பாசனத்திற்கு பயன்படுத்தலாம். இருப்பினும், மத்திய அரசு மேக விதைத்தூவல் வழி கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கு நீர்ப் பற்றாகுறை ஏற்படாமல் இருக்க வழிவகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் பொறியியலாளர் ஜசானி மைடின்சா.
தெலுக் பஹாங் அணையின் நீர் சேகரிப்பு அளவு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நேரில் சென்று பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.