பினாங்கில் நீர் கட்டணம் உயர்ந்துள்ளதை கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜசானி மைடின்சா. கடந்தாண்டு அறிவித்திருந்ததை போல தேசிய நீர் சேவை வாரியத்திடம் நீர் கட்டண விலையேற்ற மனு அனுப்பட்டு அமைச்சரவையிலும் பிப்ரவரி மாதம் 15-ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜசானி பினாங்கில் முதல் 35,000 லிட்டர் நீர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரிம 0.32 சென் விலையேற்றப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் ஒப்பிடுகையில் பினாங்கு மாநிலம் இன்னமும் குறைந்த விலையில் நீர் விநியோகம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.. ஒரு மாதத்திற்கு 20,000 லிட்டர் நீர் உபயோகிக்கும் 47.4% வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டணம் உயர்வு இல்லை என தெளிவுப்படுத்தினார் அதன் நிர்வாக அதிகாரி.
பினாங்கில் நீர் பயன்பாட்டின் அளவு கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் 298/லிட்டர்/கபிதா/நாள் அதிகரித்துள்ளது. எனவே, பயனீட்டாளர்களிடையே நீரின் பயன்பாட்டை குறைக்கும் விழிப்புணர்வை மேலோங்கச் செய்யும் வகையில் நீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில் பினாங்கில் நீர் போதுமான அளவில் இருப்பதை உறுதிச்செய்யவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் நீரின் பயன்பாட்டை குறைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் . இந்த நீர் கட்டண உயர்வுக்கும் அரசாங்க சேவை வரிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனத் தெளிவுப்படுத்தினார் .