கெபுன் பூங்கா- பினாங்கு மாநிலத்தில் முன்னதாக அறிவித்தது போல பொது மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி தைப்பூசக் கொண்டாட்டம் மற்றும் இரத ஊர்வலத்தை ரத்து செய்வது குறித்த நிலைப்பாட்டினை உறுதிச்செய்கிறது.
நேற்று செட்டியார் தரப்பிடம் இருந்து வெள்ளி இரதத்தின் ஊர்வலத்தை அனுமதிக்குமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தது தொடர்பாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு அறிவித்தார்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அல்லது பொதுவாக செட்டியார் என்று அழைக்கப்படும் இத்தரப்பினர், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவின் போது வெள்ளி இரத ஊர்வலத்தை ஏற்று நடத்துவர்.
பத்துமலை கோவிலில் இரத ஊர்வலத்திற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, வெள்ளி இரதமும் ஊர்வலம் செல்ல அனுமதிக்குமாறு செட்டியார்கள் இப்போது மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம், வெள்ளி மற்றும் தங்க இரதங்களையும் உள்ளடக்கிய இரத ஊர்வலங்கள் என அனைத்து கொண்டாட்டங்களையும் தடைச்செய்யும் முடிவினை முன்னதாகவே செட்டியாரின் பிரதிநிதி முன்னிலையில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தின் போது இப்பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
“நாம் இந்த விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கோவிட் -19 தொற்றுநோய் பரவலை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்பதால் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மகிழ்விப்பதற்காக முடிவுகள் எடுக்க முடியாது,” என்று தண்ணீர்மலை, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவருமான இராமசாமி கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராகப் போராடும் போர்களத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைப்பூசக் கொண்டாட்டத்தை ரத்து செய்ய அறிவித்த முதல் மாநிலமாக பினாங்கு விளங்குகிறது என்று இராமசாமி கூறினார்.
“பினாங்கில் புதிதாக ‘தைப்பூசத் திரள்’ தோன்றுவதற்கு விரும்பவில்லை. எனவே, பினாங்கு மற்றும் ஒட்டுமொத்த மலேசியர்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்றார்.
இதற்கிடையில், பினாங்கு தண்ணீர்மலை ஆலயத் தலைவர் டத்தோ ஆர்.சுப்பிரமணியம், ஆலயத்தில் நடத்தப்படும் பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் ஜனவரி, 27 முதல் இயங்கலை வாயிலாக ஆஸ்ட்ரோவில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என கூறினார்.
“மேலும் நாங்கள் பக்தர்கள் இத்தினத்தன்று அர்ச்சனை செய்யும் பொருட்டு
014-3500638 / 01126523916 எனும் எண்களில் புலனம் வாயிலாக ‘நட்சத்திரம்’ மற்றும் ‘ராசி’ தொடர்பான சுயத்தகவல்களை அனுப்பலாம்”, என்று சுப்பிரமணியம் கூறினார்.
கடந்த ஜனவரி,8 ஆம் தேதி, 235-ஆவது தைப்பூசக் கொண்டாட்டத்தை ரத்து செய்வது குறித்து இராமசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பில் காவடி மற்றும் பால் குடம் எடுத்தல், அன்னதானம், முடிக் காணிக்கை, தண்ணீர் பந்தல்களை நிறுவுதல், இரத ஊர்வலம் போன்ற வெளிப்புற பாரம்பரிய நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம் (ஜாலான் கெபுன் பூங்கா) ஆகிய இரண்டு கோயில்களில், தைப்பூசம் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனவரி,27 ஆம் தேதி தொடங்கி ஜனவரி, 29 ஆம் தேதி வரை வழிபாட்டுகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் பக்தர்கள் ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கடந்த காலங்களில், மலேசியா முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் வகையில் பினாங்கு தைப்பூசம் விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
நன்கொடை வழங்க விரும்பும் பக்தகோடிகள் 8004080562 என்ற சி.ஐ.எம்.பி வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்.