பினாங்கில் மக்களுக்கான நிதியுதவித் திட்டங்கள் விரைவாக வழங்கப்படுவது உறுதிச்செய்யப்படும் – முதல்வர்

Admin
  1.  

    ஜார்ச்டவுன் – அரசியல் பின்னனியைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கோவிட்-19ஐ எதிர்க்க வேண்டும் என இன்று கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலையில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கோரிக்கை விடுத்தார்.

    இதன் அடிப்படையில், பினாங்கு மாநில முதல்வர் இன்று மாநில எதிர்கட்சித் தலைவர் டத்தோ முகமாட் யூசோப் முகமட் நோரை பினாங்கு மாநில பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக இணைய அழைப்பு விடுத்தார்.

    பினாங்கு மாநில பாதுகாப்புக் குழுவின் சந்திப்புக் கூட்டம் வருகின்ற மார்ச் மாதம் 30-ஆம் தேதி அன்று கொம்தாரில் நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், தற்போதைய கோவிட்-19 நெருக்கடியில், பினாங்கு மாநில பிரதிநிதிகள், அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சிகளைப் பொருட்படுத்தாமல், பினாங்கு மக்களின் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கோன் யாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

    இதனிடையே, அரசியல் கட்சியைப் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கியதையும் மீண்டும் குறிப்பிட்டார். பினாங்கு மாநில 40 சட்டமன்ற உறுப்பினர்களும் ரிம30,000 சிறப்பு நிதி ஒதுக்கீடாக தத்தம் தொகுதி மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த பெறுவர்.

    பிரதமர் நேற்று அறிவித்த மத்திய அரசின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் பினாங்கு மக்கள் உதவித் திட்டம் ஆகியவை பொது மக்கள் இந்த கோவிட்-19 வீழ்ச்சியிலிருந்து மீள தூண்டுகோலாக அமையும் என மாநில அரசு நம்புகிறது.

    “எங்கள் தற்போதைய கவனம் (மாநில அரசு) அனைத்து நிதி உதவிகளும் சலுகைகளும் இலக்கு குழுவிற்கு வேகமாகவும் துல்லியமாகவும் கிடைக்கப்பெறுவதை உறுதிச் செய்வதாகும். பினாங்கு மக்கள் உதவித் திட்ட நிதியுதவி, வருகின்ற ஏப்ரல் மாதம் அதாவது இன்னும் நான்கு நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும்”, என மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் உறுதியளித்தார்.