பினாங்கில் மேலும் 8 சாலைகளில் இலவச பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளன – மாநில முதல்வர்

Admin

பினாங்கு மாநில அரசின் முயற்சியில் கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி தொடங்கி 52 பொதுசேவை பேருந்துகள் (இரபிட் பினாங்கு) இலவசமாக பினாங்கு மாநிலத்தில் வலம் வர திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பினாங்கு மாநிலத்தில் நான்கு முக்கிய பிரதான சாலைகளில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ள வேளையில் மேலும் எட்டு சாலைகள் இத்திட்டம் 14-ஆவது பொதுத் தேர்தலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, மேலும் எட்டு சாலைகளில் இந்த இலவச பேருந்து திட்டத்தை கட்டம் கட்டமாக தொடங்கவுள்ளது என பினாங்கு மாநகர் கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்தார்.

பத்து காவான் (6 ஜுலை), புலாவ் தீக்குஸ் (7 ஜுலை), ஜார்ஜ்டவுன் இரண்டாவது பாதை (10 ஜுலை), பெர்தாம் (13 ஜுலை), பாயான் பாரு (17 ஜுலை), அல்மா (22 ஜுலை), சுங்கை டுவா – பினாங்கு அறிவியல் பல்கலைகழகம்(26 ஜுலை) மற்றும் செபராங் ஜெயா (31 ஜுலை) என கட்டம் கட்டமாக இம்மாதம் இந்த எட்டு சாலைகளிலும் இலவச பேருந்து திட்டம் தத்தம் சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்படும் என குறிப்பிட்டார்.

பத்து காவான் இலவச பேருந்து திட்ட மாதிரி வரைப்படம்

இதனிடையே, பினாங்கு ராபிட் நிறுவனம் பண பற்றாக்குறையால் சில பாதைகளில் பேருந்துக்களின் எண்ணிக்கையை குறைக்க எண்ணம் கொண்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தார். பினாங்கு வாழ் மக்களிடையே பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பழக்கத்தை தூண்டும் வகையில் மாநில அரசு பல அரிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும் பொது மக்களிடையே பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த விழிப்புணர்வு மேலோங்க செய்யவும் இத்திட்டம் துணைப்புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்புதிய திட்டத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் நோக்கில் மாநில அரசு ரிம15 கோடி செலவிட்டுள்ளது பாராட்டக்குரியதாகும். இந்த இலவச பேருந்து சேவை தோட்டப்புறம் அல்லது மக்கள் நடமாட்டம் கொண்ட இடங்களில் இருந்து ஏற்றிவந்து முக்கிய பேருந்து நிறுத்தும் இடங்களில் இறக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பேருந்துகள் 12 வெவ்வேறு வழிகளில் காலை 6 மணி தொடங்கி 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிட காலவித்தியாசத்தில் பினாங்கு வாழ் மக்கள் இச்சேவையினை பெற்றுக்கொள்ளலாம்

பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய இலவச பேருந்து திட்டம் சிறந்த வரவேற்பு பெற்றுள்ளது. தனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு பினாங்கு பொது ஊழியர்களுக்காக (Bridge Express Shuttle Transit (BEST) எனும் பேருந்து சேவையை வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.