பினாங்கில் விவேக வாகன நிறுத்தும் திட்டம் செயல்படுத்த முதல் கட்டப் பணி தொடக்கம் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் பினாங்கில் விவேக வாகன நிறுத்தும் முன்னோடி திட்டத்தின் முதல் கட்டமாக வருகின்ற ஜூலை மாதம் 19 முதல் 25 வரை சென்சார்பொருத்தப்படும். இந்த முதல் கட்டப் பணி மேற்கொள்ளும் பொருட்டு சில சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார். இத்திட்டத்தில் முதல் கட்டமாக தீவுப்பகுதியில் 647 வாகன நிறுத்தும் இடங்களும் பெருநிலப் பகுதியில் 350 வாகன நிறுத்தும் இடங்களும் விவேக கார் நிறுத்தும் இடமாக உருமாற்றம் காணும்.


முதல் கட்டமாக விவேக வாகன நிறுத்தும் திட்டம் மூன்று மாதத்திற்கு அமல்படுத்தியப் பின் எஞ்சியுள்ள 36,000 வாகன நிறுத்து இடங்களிலும் சென்சார் பொருத்தப்படும் . இத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 2020-க்குள் நிறைவுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்து கூடிய விரைவில் பொது மக்களுக்கு தகவல் மற்றும் விளப்பரம் படுத்தும் பொறுப்பை இச்செயல்முறையை நிர்வகிக்கும் எய்தெக் பாடு பெர்ஹாட் நிறுவனம் HeiTech Padu (HTP) Berhad ஏற்கும் என மாநகர் கழக அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ரொசாலி முகமட், மாநகர் கழகச் செயலாளர் டத்தோ அட்னான் , தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எச்.தி.பி பெர்ஹாட் நிறுவன நிர்வாகத் துணைத் தலைவருமான அப்துல் ஹலிம் முகமட் லசிம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி ஆலோசகர் பிரதிநிதி தேவ் குமார் ராகவன் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த ஒருங்கிணைப்புத் திட்டம் அமல்படுத்துவதன் மூலம் வாகன நிறுத்தும் கட்டணம் நிலைநிறுத்தப்படும் என ஜெக்டிப் தெரிவித்தார். தீவுப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு 0.80சென் அதேவேளையில் பெருநிலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 0.40சென்னும், அதேபோல் மாதந்திர கட்டணம் தீவில் ரிம150 மற்றும் பெருநிலத்தில் ரிம75 என நிலைநிறுத்தப்படும் என விளக்கமளித்தார்.

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை (காலை மணி 8.00 முதல் மாலை மணி 6.00 வரை) வாகன நிறுத்தும் இடத்திற்குக் கட்டணம் விதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறையில் கட்டண விலக்கு வழங்கும் செயல்முறையை பினாங்கு முழுவதும் செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளது. இந்த திட்டம் அரசிதழ் செய்தவுடன் நடைமுறைப்படுத்தப்படும்,” என மேலும் ஜெக்டிப் தெரிவித்தார்.

நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த விவேக திட்டத்தை செயல்படுத்துகிறோம். இத்திட்டம் தேசிய ரீதியில் ஒப்பிடுகையில் பினாங்கு மாநிலம் முன்னணி வகித்து முதலில் நடைமுறைப்படுத்துகிறது,” என அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

இத்திட்டம் தனியார் நிறுவன நிதி ஒதுக்கீட்டில், இணையப் பயன்பாடு, ‘perkomputeran awan’, இணைய வழி கட்டணம் செலுத்தும் முறை என விவேக கார் நிறுத்தும் இடமாகச் செயல்படும்.