புதிய வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சராகப் பதவியேற்ற டத்தோஸ்ரீ ரீசல் மெரிகன் நைனா மெரிகன்
பினாங்கு மக்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் வழங்குவதோடு, 2022-க்கான வீடமைப்புப் பராமரிப்பு திட்டத்திற்காக ரிம100 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்க உத்தேசிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ இன்று ரீசல் மெரிகனுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் வழங்கும் மாநில அரசின் கடப்பாடு மற்றும் மத்திய அரசு அதனை செயல்படுத்த ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் ஒரு கடிதம் அனுப்புவதாகக் கூறினார்.
“பினாங்கு ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும், நாங்கள் அதிக வரி செலுத்துகிறோம். எனவே, நாங்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் பெற தகுதியானவர்கள்.
“நாங்கள் வீட்டுவசதிக்கு மேம்பாட்டுக்கு நிறைய திட்டங்கள் செயல் படுத்தியுள்ளோம். ஆனால் மத்திய அரசின் மூலம் கட்டப்படும் வீடுகள் எங்கே? ” என இன்று பாயான் முதியாராவில் உள்ள ‘தி ஜென்’ வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தைப் பார்வையிட்ட பிறகு ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.
பினாங்கு வீட்டுவசதி வாரிய பொது மேலாளர் ஐனுல் ஃபாதிலா சம்சுடி மற்றும் ஆசியா கிரீன் குழும இயக்குனர் டான் லி மெய் ஆகியோர் உடன் வருகையளித்தனர்.
“பினாங்கு பொது மற்றும் தனியார் (குறைந்த விலை மற்றும் குறைந்த நடுத்தர விலை) வீடமைப்புத் திட்டங்களைப் பராமரிக்க ஏறக்குறைய ரிம300 மில்லியன் செலவழித்துள்ளது. மின் தூக்கி மேம்படுத்துதல், கூரைகள் மேம்படுத்துதல் மற்றும் தண்ணீர் தொட்டிகளை மாற்றவும் இந்நிதி பயன்படுத்தப்பட்டது.
“முன்னதாக மத்திய அரசு
கிட்டத்தட்ட ரிம30 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ததற்காக நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அடுத்த ஆண்டுக்கு, பராமரிப்புத் திட்டம் செயல்படுத்த ரிம100 மில்லியன் ஒதுக்கீடு கோரியுள்ளோம். மேலும் பினாங்கு மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறோம்.
“இந்த கடிதத்தில் நகர்ப்புற மீளுருவாக்கம் திட்டம் உட்பட பல வீடமைப்புப் பராமரிப்பு திட்டங்களும் அடங்கும்,” என்று ஜெக்டிப் கூறினார்.
மாநில அரசு பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் பினாங்கு மக்களுக்காக 220,000 குறைந்த விலை, குறைந்த நடுத்தர விலை மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் வழங்க இணக்கம் கொண்டுள்ளது.
இன்றுவரை, இதுபோன்ற 120,000 மலிவு விலை வீடுகள் இம்மாநிலத்தில் கட்டப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
ஆசியா கிரீன் பிராப்பர்டீஸ் மேம்பாட்டு நிறுவன நிர்மாணிப்பில் கட்டப்படும் ஜென் வீடமைப்புத் திட்டத்தில், மொத்தம் 1,200 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும் 850 சதுர அடியில், ரிம300,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தால் தி ஜென் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைய கால தாமதம் ஏற்படுவதாக டான் கூறினார்.
“முன்னதாக 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் திட்டம் நிறைவுபெற திட்டமிட்டிருந்தோம். ஆனால் கோவிட் -19 சூழ்நிலையால் கட்டுமானப் பணிகள் 2023 இன் தொடக்கத்தில் நிறைவுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் கட்டுமானம் மேற்கொள்ள தடை ஏற்படவில்லை. ஆனால், சில தொழிற்சாலைகள் இன்னும் செயல்படாததால் எங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறோம்.
“ஜென் வீடமைப்புத் திட்டம் இப்போது சுமார் 40% நிறைவடைந்துள்ளது. நாங்கள் இத்திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏற்படுத்தவில்லை. நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை வீட்டு வாங்குநர்கள் புரிந்துகொள்வார்கள்,” என்று டான் நம்பிக்கை தெரிவித்தார்.