ஜார்ச்டவுன் – பினாங்கில் வீட்டு விலைகள் உயர்வு, பொது மக்களின் வருமானத்தின் அதிகரிப்புக்கு ஏற்புடையதாக உள்ளது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு கூறினார்.
இன்று மாநில சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபௌசி யூசுஃப் எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளித்த சுந்தராஜு, இந்த ஆண்டின் இரண்டாவது தவணையில் சொத்து சந்தை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
“தேசிய சொத்து தகவல் மையத்திலிருந்து (NAPIC) சேகரிக்கப்பட்ட தகவலின்படி, 2,901 யூனிட்களில் 502 யூனிட்கள் மட்டுமே இம்மாநிலத்தில் விற்பனையாகாமல் இருக்கிறது, அதாவது 17.3% ஆகும். விற்கப்படாத வீடுகளின் விலை ரிம300,000 மற்றும் அதற்கும் குறைவானவை, ஏனெனில் நிதி நிறுவனங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படாத கடனுதவி இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
“அதுமட்டுமின்றி, ரியல் எஸ்டேட் துறை ஊக்கக் கொள்கை மற்றும் மாநிலத்தால் தொடங்கப்பட்ட வீடு வாங்கும் பிரச்சாரம் (HOC) ஆகியவை வீட்டு விற்பனை சந்தைக்குச் சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளன.
“இந்தக் கொள்கையின் வாயிலாக, அதிகபட்ச வீட்டு விலை 10% குறைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் பினாங்குத் தீவு மற்றும் செபராங் பிறை ஆகிய இடங்களில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் விலை முறையே ரிம270,000 மற்றும் ரிம225,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
“மாநில முன்முயற்சியின் மூலம் பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கான சொந்த வீடுகளை வாங்க முடியும்,” என்று அவர் விளக்கமளித்தார்.
நாட்டின் மற்ற மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் வீட்டு விலைகளை உயர்த்தியிருந்தாலும், வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் உச்சவரம்பு விலைகள் இன்னும் ரிம300,000 ஆக மாநில அரசால் கட்டுப்படுத்தப்படுவதாக சுந்தராஜூ சுட்டிக்காட்டினார்.
“நாங்கள் இப்போது B2 குடும்பங்களுக்கு ஒரு புதிய வீட்டுத் திட்டத்திற்கான பிரிவை அமைக்க முற்படுகிறோம். இந்தப் பிரிவுக்கான வீட்டின் விலை ரிம100,000 ஆகும். இத்திட்டத்தின் கீழ் மொத்த குடும்ப வருமானம் ரிம5,000 கீழ் கொண்டவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் விளக்கினார்.
பினாங்கில் கட்டுப்படுத்தப்பட்ட வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் வகைகள் மற்றும் அதன் விலைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
RMM A – 650 சதுர அடி (ரிம 42,000)
RMM B – 750 சதுர அடி (ரிம 72,500)
RMM C1 – 750 சதுர அடி; சீரமைப்பு செய்யப்பட்டது (ரிம 150,000)
RMM C2 – 800 சதுர அடி (ரிம 250,000)
RMM C3 – 850 சதுர அடி (ரிம 300,000)