பினாங்கில் 209 சிறார் வன்கொடுமை வழக்குகள் பதிவு

 

ஜார்ச்டவுன் – பினாங்கில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 209 சிறார் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 91 பாலியல் வழக்குகள் ஆகும்.

மாநில மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் கூறுகையில், 67 வழக்குகளில் புறக்கணிப்பு, உடல் ரீதியான வன்முறை (42) மற்றும் ஒன்பது வழக்குகளில் உணர்ச்சி வன்கொடுமை எனப் புகாரளிக்கப்பட்ட பட்டியலில் அடங்கும்.

“தென் செபராங் பிறை மாவட்டத்தில் அதிகமாக 97 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், வடக்கிழக்கில் 58 வழக்குகள், வட செபராங் பிறை (21) வழக்குகள் மற்றும் தென் செபராங் பிறையில் 19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

“சிறார் வன்கொடுமை ஏற்படுவதற்கு நிதிச் சிக்கல்கள், பெற்றோர்களின் கவனக்குறைவு, பாதுகாவலர்கள் அல்லது குழந்தை பராமரிப்பாளர்களின் அலட்சியம், சைபர் ஆக்கிரமைப்பு மற்றும் குழந்தைகள் ஆண் நண்பர்கள்/காதலளர்களை பின்பற்றுவது ஆகிய காரணிகள் அடங்கும்,” என கூறினார்.

இன்று பினாங்கு மாநில சட்டமன்ற அமர்வில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் அவர்களின் வாய்மொழிக் கேள்விக்கு பதிலளித்த போது சோங் எங் இவ்வாறு கூறினார்.

சமூகநலத் துறை (ஜே.கே.எம்) அதன் வழிகாட்டுதல்களில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி) இணங்க உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

ஜே.கே.எம் வன்கொடுமை தொடர்பான புகார் அல்லது தகவல் பெறப்பட்ட 10 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவரை முறையான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதோடு மருத்துவ அதிகாரியிடம் அவர்களின் சுகாதாரம் குறித்து உறுதிப்படுத்துதல் ஆகியவை அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அடங்கும்.

அவரைப் பொறுத்தவரை, குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 19 மற்றும் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 30 இன் கீழ் தகுதியான தனிநபரின் பராமரிப்பில் தற்காலிகமாக ஒரு குழைந்தையை வைக்க நீதிமன்றத்தில் உத்தரவும் பெறப்படும்.

பாதிக்கப்பட்டவர்கள் நிர்ணயிக்கப்பட்ட சட்டவிதிமுறைகளுக்கு இணங்க பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு ஆலோசனை சேவைகள் மற்றும் ஆதரவு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“அதுமட்டுமின்றி, குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 7 இன் கீழ் நியமிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவும் உள்ளூர் சமூக மட்டத்தில் சிறார் வன்கொடுமை தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதில் பங்கு வகிக்கிறது,” என்று அவர் விளக்கினார்.