பினாங்கில் 237-ஆவது ஆண்டாக மிக பிரமாண்டமான முறையில் தைப்பூசக் கொண்டாட்டம்

கெபுன் பூங்கா – பினாங்கு மாநிலத்தில் 237-ஆவது ஆண்டாக மிக பிரமாண்டமான முறையில் தைப்பூச விழாவைக் கொண்டாடும், பினாங்கு வாழ் இந்து சமூகத்துற்கு முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் பாராட்டுத் தெரிவித்தார்.

 

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குப் பிரார்த்தனை மற்றும் வேண்டுதல்கள் செலுத்தும் வகையில் இந்து சமூகத்தினர் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தக் கொண்டாட்டத்தை பேணிவருவது ஒரு சிறந்த சாதனையாகும், என்றார்.

 

“தற்போது எத்தனை தலைமுறைகள் இந்த மதக் கொண்டாட்டத்தைப் பின்பற்றுகின்றனர் என்று கற்பனை செய்து பாருங்கள்.

 

“நிச்சயமாக, இந்த ஆண்டு கொண்டாட்டம், கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக முந்தைய ஆண்டுகளில் முடக்கப்பட்ட கொண்டாட்டங்களுக்குப் பிறகு நடத்தப்படும் சிறந்த கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது.

 

“நமது இந்து நண்பர்கள் அனைவருக்கும் தைப்பூசத் தின நல்வாழ்த்துக்கள்.

 

“உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் போது பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் கொண்டாடுங்கள்,” என்று இன்று அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு வருகையளித்தபோது தனது உரையில் சாவ் இவ்வாறு கூறினார்.

 

சாவ் தனது உரையில், இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு கோவிலுக்கு ரிம200,000 நிதியுதவி வழங்குவதாகவும், அறிவித்தார்.

 

இதற்கிடையில், கோவிலின் தலைவர் டத்தோஸ்ரீ குவேனராஜு, இதுவரை சுமூகமான மற்றும் அமைதியான கொண்டாட்டத்தை உறுதிப்படுத்த மிகவும் கடினமாக உழைத்த அமலாக்க அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் அவரது கோவில் நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றித் தெரிவித்தார்.

மாநில முதல்வர் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு வருகையளித்தார்.

“பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) ஊழியர்கள், காவல்துறை மற்றும் ரேலா உறுப்பினர்கள், இரதங்கள் மற்றும் கூட்டத்தை நிர்வகிக்க இக்குழுவினர் உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை,” என்று அவர் கூறினார்.

 

மற்றொரு விஷயத்தில், பக்தர்கள் சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக கோவிலில் கட்டப்படத் திட்டமிடும் பல்நோக்கு மண்டபம் பற்றி குவனராஜூ பேசினார்.

 

“இந்த திட்டத்தை செயல்படுத்த எங்களுக்கு உதவ பினாங்கு அரசாங்கம் நிதியுதவி வழங்க வேண்டும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

முன்னதாக, இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி, மலைக்கோயிலுக்கு மூத்த குடிமக்களை ஏற்றிச் செல்ல மலைக்கோயிலின் கீழ் பகுதியில் ஃபுனிகுலர் ரயில்பாதையின் அவசியம், குறித்து தெரிவித்தார்.

 

இதற்கிடையில், வருடாந்திர பாரம்பரிய அடிப்படையில், தங்கம் மற்றும் வெள்ளி இரதங்கள் தற்போது அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில் ஆகியவற்றில் வைக்கப்படுகின்றன.

தொடர்ந்து நாளை குயின் ஸ்ட்ரிட் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலுக்கும், பினாங்கு வீதியில் உள்ள கோவில் வீடு கோயிலுக்கும் தங்க வெள்ளி இரதங்கள் திரும்பும்.

பக்தர்கள் பக்தி நெறியோடு காவடி ஏந்தி வந்தனர்.