பினாங்கு அனைத்துலக அறிவியல் விழா 2013

Admin

பினாங்கு அறிவியல் மன்றம்,  மாநில அரசுடன் இணைந்து பினாங்கு அனைத்துலக அறிவியல் விழா 2013-ஐ மீண்டும்  அடுத்த மாதம்  நடத்தவுள்ளது. இவ்விழா ‘Straits Quey’ சிதெரெட்ஸ் கீ  தளத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதாவது வரும் 13-4-2013 –ஆம் நாள் காலை மணி 11.00 முதல் இரவு மணி 8.00 வரையிலும் 14-4-2013 –ஆம் நாள் காலை மணி 9.00 முதல் மாலை மணி 6.00 வரையிலும் இவ்விழா நடைபெறும்.

இவ்வாண்டு பினாங்கு அறிவியல் மன்றச் செயலகமும் அலிகேன் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடுச் செய்துள்ளனர். பினாங்கு அறிவியல் மன்றம் மற்றும்  மாநில அரசின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இவ்விழாவிற்கு Intel, Motorola, B.Braun, Mini-Circuits, Malaysians American Electronic Industry(MAEI) ஆகிய நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை வழங்கவுள்ளனர். இதன் மூலம் வருகையாளர்களுக்கு இந்நிகழ்வு உற்சாகமாகவும்  சக்தியளிக்கும் அனுபவமாகவும் அமையும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இவ்விழாவைச் சிறப்பான முறையில் வழி நடத்த 40 அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொள்வதோடு 1400 தன்னார்வலர்கள் தங்களின் சேவையை வழங்க முன்வந்துள்ளனர். இவ்விழா மகத்தான விழாவாக அமையும் பொருட்டு 10 நிறுவனங்களின் ஆதரவில் 12 நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நிகழ்ச்சி நிரல் தொகுக்கப்பட்டுள்ளது.

இவ்விழா 13 –வது பொது தேர்தல் தருணத்தில் நடத்தப்பட்டாலும் மாநில அரசின் முழு ஆதரவு வழங்கப்படும் எனப் பினாங்கு மாநில முதல்வரும் பினாங்கு      அறிவியல் மன்றத் தலைவருமான மேதகு  லிம் குவான் எங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். பினாங்கு அனைத்துலக அறிவியல் விழாவின் நோக்கத்தை அடையும் பொருட்டு  பினாங்கு அறிவியல் மன்றம் ‘புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகளை ஊக்குவித்தல்’ எனும் கருப்பொருளை அறிமுகப்படுத்துகிறது.

பினாங்கு அனைத்துலக அறிவியல் விழா பினாங்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் அறிவியல் சார்ந்த தொழிற்சாலைகள் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தொழில்நுட்ப செயல்பாட்டினைப் பிரதிபலிக்கும் அரங்கமாக அமையும் என்பது திண்ணம்.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இவ்விழாவிற்கு அழைத்து வருவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் இவ்விழாவில் கலந்து கொள்வதன் மூலம் பிள்ளைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு தங்களின் வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது என்ற பொது அறிவை வளர்த்துக் கொள்ள சிறந்த தளமாக அமையும். அதோடு பிள்ளைகளுக்கு  நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களின் நேரடி உரையாடல் மூலம் பொறியியலாளர், அறிவியலாளர், கண்டுப்பிடிப்பாளர் போன்ற வல்லுநர்களாக உருவெடுக்கப் வழிக்காட்டியாக அமையும்,.

மேல் விபரங்களுக்கு www.psc.org.my என்ற இணையத்தலத்தை வலம் வரலாம் அல்லது அனிதா தான் 04-6403113 / 012-4072618 என்ற தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.