பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சி வருகின்ற நவம்பர் 12-13 திகதிகளில் பினாங்கு ஸ்பைஸ் அனைத்துலக மாநாடு மையத்தில் நடைபெறவிருப்பதாக பினாங்கு அறிவியல் ஃகபேவில் நடைபெற்ற அதன் அறிமுக விழாவில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இந்த அனைத்துலக அறிவியல் கண்காட்சி மாநில அரசின் முழு ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வினை மெருகூட்ட நிறுவனங்களும் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். அறிவியல் மற்றும் கல்வி வழி புத்தாக்கத் திறனை மேலோங்க செய்ய நிறுவனங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர். இதனிடையே, நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் முதல்வர் .
பினாங்கு மாநிலத்தை அனைத்துலக மற்றும் அறிவார்ந்த நகரமாக உருமாற்றும் முயற்சியில் மாநில அரசு ரிம20 பில்லியன் செலவில் தேக் டோம் மையம், ரிம6 மில்லியன் செலவில் கர்பால் சிங் கற்றல் மையம், ரிம20 மில்லியன் செலவில் பினாங்கு அறிவியல் ஃகபே மற்றும் ரிம 6மில்லியன் செலவில் ஜெர்மன் இரட்டை தொழிற்பயிற்சி மையம் என உருவாக்கியுள்ளன பாராட்டக்குரியதாகும். பினாங்கு மாநில மாணவர்கள் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் புலமை பெற்று சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சிக்கு சுமார் 60,000 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகையளிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.