பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுகள் வழங்கும் சடங்கு ஸ்ரீ பினாங் அரங்கில் நடைபெற்றது. பினாங்கு ஆளுநரின் பிறந்தநாளை முன்னிட்டு 1085 பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதளிப்பு நிகழ்வில் மாநில ஆளுநர் தம்பதியர், மாநில முதல்வர் தம்பதியர், மாநில முதலாம் துணை முதல்வர் தம்பதியர், மாநில இரண்டாம் துணை முதல்வர் தம்பதியர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள், ஆளுநரின் பிறந்த நாள் வைபவத்தைத் தொடர்ந்து பல்வேறு விருதுகள் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரமுகர்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.மேலும், (டி.எம்.பி.என்) என்ற உயரிய விருது மாநில முதலாம் முதல்வர் ஹஜி முகமது ரஷிட் பின் ஹஸ்னோன் மற்றும் மாநில சபாநாயகர் லாவ் சூ கியாங் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மாநிலத்தின் உயரிய விருதாகக் கருதப்படும் டத்தோ ஸ்ரீ பட்டம் ஆர். அருணாசலத்திற்கு வழங்கப்பட்டது, பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் திரு பி.ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கு டி.ஜே.என் என்ற விருது கொடுக்கப்பட்டது.
நாடறிந்த ஏகேஎஸ் நிவாஸ் நிறுவனத்தின் தலைவரும் அதன் நிர்வாகத்தின் இயக்குநருமான இரா. முரளிதரன் அவர்களுக்கு டி.எஸ்.பி.என் என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவருக்கு முன்னதாக பிகேடி, பிஜேஎம் ஆகிய விருதுகளும் பெற்றுள்ளார் என்றால் மிகையாகாது. இந்த பிரமுகர் பல ஆலயங்கள் குறிப்பாக பினாங்கு தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயம் முதற்கொண்டு, பிறை ஜாலான் பாரு அருள்மிகு முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பட்டர்வொர்த் வட்டாரத்தில் உள்ள பல ஆலயங்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கி ஆலய வளர்ச்சிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்டுவரும் அதே வேளையில் இளையோர், முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் உதவிகரம் நீட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முத்தமிழ்மணி க.உ பூங்கொடி இளங்கோவன் அவர்களுக்கு பி.கே.தி, பி.ஜே.கே என்ற விருதைத் தொடர்ந்து இம்முறை டி.ஜே.என் என்ற விருது வழங்கப்பட்டது. இவர் பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்கத் தோற்றுனர் மட்டுமின்றி நடிகர், பாடகர். நாடக ஆசிரியர், இயக்குநர் என கலையுலகின் சேவையாளர் என்றால் மிகையாகாது.
வால்டோர் தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழுத் தலைவர் திரு நா. தியாகராஜன் அவர்களுக்கு முதல்முறையாக (பி.கே.தி) என்ற விருது கொடுக்கப்பட்டது. இவர் ஒன்பது வருடமாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசியர் சங்கத் தலைவராகச் சேவையாற்றி வருகிறார் என்பது பாராட்டக்குறியது.
பினாங்கு மாநில சுற்றுச்சூழல் தூய்மையாகவும் பொலிவாகவும் காட்சியளிப்பதற்குக் காரணகர்த்தாவாக அமையும் நகராண்மைக்கழக ஊழியர்களின் அதாவது கடினம், அசுத்தம் மற்றும் ஆபத்தானப் பணியை மேற்கொள்வோரின் சேவையைக் கொளரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டது. பினாங்கு நகராண்மைக் கழக மற்றும் செபெராங் பிறை நகராண்மைக் கழக ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு பல இந்தியர்களுக்கு உயரிய விருதுகள் கிடைக்கப்பெற்றிருப்பதன் வாயிலாக இந்தியர்களின் பங்களிப்பு மாநில அரசினால் கொளரவிக்கப்படுவது அனைவராலும் உணரப்படுகிறது.