பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் ‘பிராண இலவச கிளினிக்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிளினிக் கடந்த 4-9-2013-ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக புலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய யப் சூ உய் அவர்களின் பொற்கரத்தால் திறப்பு விழாக் கண்டது.

இந்த கிளினிக் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் என பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் திரு ஆனந்தன் நாயுடு கூறினார். இந்த இலவச கிளினிக் 1940-ஆம் ஆண்டுகளில் இந்திய தொழிலாளர்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்டு வந்து பின்னாளில் மூடப்பட்டது. இதனை வழிகாட்டலாகக் கொண்டு மீண்டும் இந்த இலவச கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது என வரவேற்புரையில் தெரிவித்தார்.
இந்தப் பிராண இலவச கிளினிக் தொடங்குவதற்கு காரணகர்த்தாவாக அமைந்த எலும்பியல் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் திரு விஜயன் ராஜு அவர்களுக்கு நன்றி மாலை சூட்டினர். தொடக்கமாக இந்த இலவச கிளினிக் ஒவ்வொரு புதன்கிழமை மாலை மணி 4.00 முதல் 6.00 வரை செயல்படும். பொது மக்களின் ஆதரவைப் பெறுமானால் இந்த இலவச கிளினிக் வாரத்திற்கு மூன்று முறை செயல்படுத்தப்படுவதற்கு எண்ணம் கொண்டுள்ளதாக அதன் இயக்குநர் டாக்டர் திரு விஜயன் கூறினார்.
இந்த கிளினிக்கில் மரபுவழி அணுகுமுறை அதாவது உடல், உணர்வு, ஆன்மீகம், சமூகம், சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வு என்ற ரீதியில் வழங்கப்படும் மருத்துவ முறையானது நோயாளிகளுக்கு மாற்று மருந்தாகவும் அமையும். இலவச மருத்துவம் மட்டுமின்றி மனோதத்துவ அறிவுரை, முறையான உணவு பயன்பாடு பற்றிய வழிகாட்டலும் கொடுக்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவம் வழங்குவதற்குத் தன்னார்வம் மட்டுமல்லாது தொண்டுள்ளம் மிக்க ஐந்து தனியார் மற்றும் பொது மருத்துவமனை மருத்துவர்கள் சேவையாற்ற முன்வந்துள்ளனர்.

இந்த கிளினிக்கை “பிராண இலவச கிளினிக்” என அழைக்கப்படுவதன் நோக்கம் என்னவென்றால் பிராணம் என்பது உயிர் எனப் பொருள்படுகிறது. எனவே, இந்த பிராண இலவச கிளினிக் என்பது பொது மக்களின் உயிரைக் காக்கும் காப்பகமாக விளங்கும் என்றால் மிகையாகாது.
இந்த இலவச கிளினிக்கை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த புலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்புனர் மதிப்பிற்குரிய யப் சூ உய் பினாங்கு இந்தியர் சங்கத்தின் இந்த அரிய முயற்சியைக் கண்டு அகம் மகிழ்ந்தார். மேலும், ஒவ்வொரு புதன்கிழமையும் தனது பிரதிநிதியை இவ்விடத்திற்கு அனுப்பி பொது மக்களின் பிரச்சனைகளைக் கண்டறிவதோடு உடனடி உதவிகரம் நீட்டுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, புலாவ் தீக்குஸ் வட்டாரத்தில் வசிக்கும் ஏழை மக்கள் இந்த இலவச கிளினிக் மருத்துவச் சேவையைப் பெறும் பொருட்டு இலவச போக்குவரத்து ஏற்பாடு செய்துத் தருவதாகச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பினாங்கு இந்தியர் சங்கத்தின் இந்த முயற்சி வெற்றியடையும் வகையில் தொண்டுள்ளம் கொண்ட பொது மக்கள் நிதியுதவி வழங்க அழைக்கப்படுகின்றனர். அதோடு, மருத்துவர்கள், தாதியர்கள் இந்த பிராண இலவச கிளினிக்கில் சமூகச் சேவையாற்ற விருப்பம் உள்ளவர்கள் பினாங்கு இந்தியர் சங்கத் தலைவரைத் தொடர்புக்கொள்ளவும்.
திரு ஆனந்த கிருஷ்ணன் நாயுடு (தலைவர்)
தொலைபேசி: 04-2269929/2284295, 017-4201511
பினாங்கு இந்தியர் சங்கம்,
11, ஜாலான் பாகான் ஜெர்மால்,
10250 பினாங்கு.
அகப்பக்கம்: [email protected]